சென்னை: 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அடுத்த கல்வியாண்டில் (2025-26) 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கல்வியை தனியார் மயமாக்கும், தேசிய கல்விக் கொள்கையை மறை முகமாகத் திணிக்கும் முயற்சியாகும்.
இது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். இதற்கு நிதி சுமையைக் காரணம் காட்டி தனியாருக்கு தத்து கொடுப்பது நியாயமற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இந்த திட்டத்தால், ஊரகப் பகுதியில் அடித்தட்டு மக்களின் கட்டணமில்லா கல்வி பெறும் வாய்ப்பு பறிபோகும் பேரபாயம் இருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்ப பள்ளிகளில் பெரும்பாலும் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவு மாணவர்கள் தான் பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் 500 பள்ளிகளை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலை: கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் விளக்கம்: தமிழக தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவே, சமூக பங்களிப்பு நிதியின்கீழ் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டது. எந்த இடத்திலும் அரசுப் பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை. அமைச்சரோ, அதிகாரிகளோ சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.