Book Fair: "வெற்றிமாறன் படமாக்கும் சமயத்தில் இது வெளியாவது பொருத்தமானது" -கிராஃபிக் நாவலாக வாடிவாசல்

காலச்சுவடு பதிப்பகம் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைப் படங்களுடன் கிராஃபிக் நாவலாக இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவல் தற்போது வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியரான அரவிந்தனிடம் பேசினோம். “தமிழ்நாட்டினுடைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று எனப் புகழப்படுகின்ற ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு பிரதி நம்மிடம் இல்லை. ஜல்லிக்கட்டு என்றால் என்ன, அது எப்படி நடக்கும் ஆகியவற்றை தெரிந்துகொள்ள நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு பல தலைமுறைகளாக நடக்கிறது. சங்க இலக்கியங்களில் இதைப் பற்றிய தரவுகள் இருக்கின்றன. ஆனால், ஜல்லிக்கட்டு பற்றிய நூலோ, நாவலோ, சிறுகதையோ இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால், அதை எழுதிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா. அந்த நாவல்தான் வாடிவாசல். மிகச்சிறிய நாவல் என்றாலும் அதைப் படித்தால் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம். கிராஃபிக் நாவல் என்பதை எளிமையாகச் சொல்லவேண்டுமானால் சித்திரக்கதை என்று சொல்லலாம். கதைக்குப் படம் போடுவது என்பது இயல்பு ஆனால் படங்களாகவே கதைகளைச் சொல்வது என்பது வேறு ஒரு பாணி” என்றார் விளக்கமாக.

வாடிவாசல்

இது குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கேட்டதற்கு, “தமிழில் ஒரு நாவலை கிராஃபிக் நாவலாக மாற்றியுள்ளோம். சி.சு. செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டைப் பற்றிய பிரபல நாவலான வாடிவாசலைப் படங்களுடன் கூடிய கிராஃபிக் நாவலாகக் கொண்டுவந்துள்ளோம். நான் இதில் எழுத்தாக்கம் செய்துள்ளேன். கேரளாவைச் சேர்ந்த அப்புபன் எனும் ஓவியர் இதில் பிரமாதமாக ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

சித்திரக்கதைளின் வடிவு பெரும்பாலும் சொற்களை விடப் படங்கள் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த கிராஃபிக் நாவல் சிறுவர் தொடங்கி எல்லாரும் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சிக்கும் சொற்களுக்கும் சமமான இடம் கொடுத்து கதையை நகர்த்திக்கொண்டு போகும் வகையில் உள்ளதால் மூல நாவலிலிருக்கும் தீவிரத்தன்மை நீர்த்துப் போகாமல் வந்திருக்கிறது.

அரவிந்தன்

தமிழில் நிறைய நாவல்கள் உள்ளன. ஆனால் காட்சிப்படுத்துவதற்குத் தகுந்ததாக இருக்காது. ரொம்ப பெரிதாக இருக்கும் அல்லது மன உணர்வுகள், உரையாடல்கள், வர்ணனைகள் அதிகம் உள்ளதாக இருக்கும். ஒரு சில நாவல்கள்தான் காட்சிப்படுத்தத் தகுந்ததாக இருக்கும். அதில் முக்கியமானதும் கிராஃபிக் நாவலுக்கு மிகப் பொருத்தமானதுமான நாவல் வாடிவாசல். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதனால் இன்றுள்ள இளைஞர்களுக்கு அதிகமாகச் சென்று சேரும். இந்த நாவலை வெற்றிமாறன் படமாக எடுக்க இருக்கிறார். இந்த நேரத்தில் கிராஃபிக் நாவலாக வருவது பொருத்தமான ஒன்றாக இருக்கும்” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.