Identity Review: வேகம் குறையாத திரைக்கதைதான்… ஆனால் ஒற்றை படத்தில் ஓராயிரம் லாஜிக் ஓட்டைகளா?

துணிக் கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, அவரின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி அலிஷா (த்ரிஷா). இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் அலன் (வினய்), அலிஷா சொல்லச் சொல்லக் குற்றவாளியின் முகத்தை வரைந்திட வேண்டி, ஜீனியஸான ஹரன் சங்கரின் (டொவினோ தாமஸ்) உதவியை நாடுகிறார்.

Identity Movie Review

முகங்களை அடையாளம் காண்பதில் சவாலுடைய (Face Blindness) அலிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து, ஹரன் வரையும் முகம் ஹரனின் முகச் சாயலிலேயே இருக்கிறது. உண்மையில் இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதோடு, இக்கொலைக்கும் இம்மூவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை நம்ப முடியாத காட்சிகள் கொண்டு பேசியிருக்கிறது இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனாஸ் பாலின் ‘ஐடென்டிட்டி’ திரைப்படம்.

ஆக்‌ஷனிலும், ஸ்டைலிஷ் லுக்கிலும் அட்டகாசம் செய்திருக்கும் டொவினோ தாமஸின் உடல்மொழி, ஏனைய இடங்களில் கொஞ்சம் செயற்கைத்தனத்தோடே கரைசேருகிறது. குழப்பமும், பதற்றமும் கலந்த பரிதவிப்போடு வரும் அலிஷா கதாபாத்திரத்திற்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. ஆனால் அந்த டப்பிங் சுத்தமாக ஒட்டவில்லை! முதல் பாதியில் வினய்யின் நடிப்பும், உடல்மொழியும் கவனிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் எடுக்கும் வெவ்வேறு அவதாரங்களில் எதார்த்தம் மிஸ்ஸிங். ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் கதைக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

Identity Movie Review

அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கான இறுக்கத்தையும், பரபர ஸ்டைலிஷ் ஆக்‌ஷனுக்கான பளபளப்பையும் வழங்கியிருக்கிறது. அடுக்கடுக்கான கிளைக்கதைகளை முடிந்தளவு சிக்கலின்றி, பரபரப்பு குன்றாமல் கோர்க்கப் போராடியிருக்கிறது சமன் சாக்கோவின் படத்தொகுப்பு. படம் முழுவதும் நிறைந்திருக்கும் உணர்ச்சிகளுக்கு ஆழத்தைக் கூட்டியிருக்கிறது ஜேக்ஸ் பிஜோய்யின் பின்னணி இசை. அதிலும் விறுவிறுப்பான காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ஜேக்ஸ்ஸின் கை ஓங்கியிருக்கிறது.

ஃபேஸ் ப்ளைண்ட்னஸால் பாதிக்கப்பட்ட பெண், அதீத திறமையுள்ள நாயகன், மர்மம் நிறைந்த போலீஸ், கண்டுபிடிக்கப்படாத குற்றவாளி என முதற்பாதியின் களமும், அதற்கான கதாபாத்திரங்களும் சுவாரஸ்யம் தருகின்றன. செயற்கைத்தனமான நடிப்பும், யூகிக்கும்படியான சில திருப்பங்களும் தொந்தரவு செய்தாலும், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், மர்ம முடிச்சுகள், பரபர விசாரணை, முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஆழமான பின்கதை என ஒரு த்ரில்லருக்கான மீட்டரில் தடங்கலின்றி நடைபோடுகிறது முதற்பாதி திரைக்கதை.

Identity Movie Review

அதுவரையில் ஒரே ட்ராக்கில் ஓடிக்கொண்டிருந்த திரைக்கதை, அதன் பிறகு எக்கச்சக்க ஜானர்களிலும், கிளைக்கதைகளிலும் தடம் மாறி ஓடுகிறது. விமானப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அண்டர்கவரில் பயணிக்கும் ‘ஸ்கை மார்ஷல்கள்’, சாட்சியங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ‘விட்னஸ் செக்யூரிட்டி புரொகிராம்’, விமானங்களின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பு, கதாநாயகனின் அதீத சாகசம் என அரை மணிநேரத்திற்கு ஒரு முறை, வெவ்வேறு உலகிற்குள் நுழைகிறது படம். அதிலும் க்ளைமாக்ஸ் வரை புதுப்புது பாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதெல்லாம் போங்காட்டம் சேட்டா!

கதைக்களத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா கதாபாத்திரங்களும் ஒரே அடுக்குமாடிக்குடியிருப்பில் இருப்பது, வினய் குறித்து சக போலிஸ்களுக்கே தெரியாமல் இருப்பது, கொலை செய்யும் நபர் ‘மனிதன்’ பட ரஜினிகாந்த் போல ‘சண்டை உடை’ மாற்றிக்கொண்டு கிளம்புவது, துப்பாக்கியால் சுட்டாலும் அடுத்தக்காட்சியில் கேஷ்வலாக கதாபாத்திரங்கள் வருவது எனக் கூரையைப் பிய்த்துக்கொண்டு லாஜிக் மீறல்கள் விழுகின்றன.

Identity Movie Review

பறக்கும் விமானத்தில் நடக்கும் தேடுதல் வேட்டையும், சண்டைக்காட்சியும் நேர்த்தியாக எடுக்கப்பட்டு, சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் தந்தாலும், அவை அளவிற்கு மீறி ஓடி, அயர்ச்சியையும் சேர்த்தே தருகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில், த்ரிஷா கதாபாத்திரம் தந்த சுவாரஸ்யம் காணாமல் போய்விடுகிறது.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்குத் தேவையான சுவாரஸ்யமான ஒன்லைனை ‘ஐடென்டிஃபை’ செய்தாலும், அதைத் தெளிவாகவும், சிக்கலின்றியும் சொல்வதற்கான திரைக்கதையை ‘ஐடென்டிஃபை’ செய்யத் தவறுவதால், இந்த ‘ஐடென்டிட்டி’ ஜஸ்ட் பாஸ் மட்டுமே வாங்குகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.