Khushbu: `அண்ணாத்த படத்தில நடிச்சதுக்கு வருத்தப்பட்டேன், ஏன்னா…' -குஷ்பு ஓப்பன் டாக்

ரஜினின் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.

ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் அதிகமான விமர்சனங்களை பெற்றது. அண்ணன், தங்கை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி என்று பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து குஷ்பு பேசியிருக்கிறார்.

குஷ்பு

இதுதொடர்பாக பேசிய அவர், “அண்ணாத்த படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்தோம். நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகள் என்றுதான் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ரஜினிக்கு படத்தில் வேறு ஜோடி இல்லை என்றும், நாங்கள் இருவரும் தான் கடைசி வரை படத்தில் வருவோம் என்று உத்தரவாதம் செய்தனர். அதனை நம்பிதான் நடித்தேன். முதலில் எனது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், படத்தில் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வந்தார்.

அதனால் என்னுடைய கதாபாத்திரம் நகைச்சுவையாக மாற்றப்பட்டது என்பதை உணர்ந்து வருத்தப்பட்டேன். படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்றிருக்கிறார். படத்தின் பாதியில் ஏற்பட்ட இந்த மாற்றம் ரஜினிகாந்த் எடுத்த முடிவா என்ற கேள்விக்கு, “அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அப்படி செய்ய மாட்டார். எனக்கு அவரை பல வருடங்களாகத் தெரியும்.

சரியாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இயக்குநர் மாற்றினாரா?அல்லது தயாரிப்பாளர் படத்தில் புது ஹீரோயின் தேவை என்று நினைத்தார்களா? என்பது தெரியவில்லை. ஆரம்பத்தில் மீனாவுக்கும் எனக்கும் தனித்தனியாக ரஜினியுடன் டூயட் பாடல்கள் இருக்கும் என்று கூறியிருந்தனர்” என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.