புத்தாண்டில் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவியதால், ரசிகர்கள் ஆவலுடன் தலைப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தான் புது தகவலாகப் படத்தில் சந்தானம் இணைகிறார் என்கிற செய்தி உலவ, உண்மை என்ன என விசாரித்தோம்.
அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பொங்கலுக்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த ஷெட்யூலில் மீண்டும் ஒரு பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்குகின்றனர்.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பின் விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பாலிவுட்டில் வெளியான `அனிமல்’ படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கில் பிஸியான வில்லனாக நடித்து வருகிறார் பாபி தியோல். ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு இதில் கமிட் ஆகி உள்ளார். இதில் அவருக்கு அசத்தலான வேடம் என்கின்றனர். தவிர, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், வரலட்சுமி, மமிதா பைஜு எனப் பலர் நடித்து வருகின்றனர்.
இதுவரை 40 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள். புத்தாண்டில் படத்தின் டைட்டில் வெளியிடலாம் என முதலில் திட்டமிட்டிருந்தனர். காரணம், பொங்கல் வெளியீட்டாக வர வேண்டிய அஜித்தின் ‘விடா முயற்சி’ படம் பிற்போடபட்டுள்ளது என்பதை அறிந்த விஜய் தரப்பு, இந்த சமயத்தில் நாம் கொண்டாடுவது சரியாக இருக்காது. எனவே, இன்னொரு சமயத்தில் டைட்டிலை அறிவிக்கலாம் என்று சொல்லிவிட்டதால், டைட்டில் அறிவிப்பை பொங்கலுக்கோ அல்லது குடியரசு தின அன்றோ வெளியிட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். இந்த சூழலில் தான் இப்போது சந்தானம் இணைந்திருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
” ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தை அடுத்து சந்தானம், ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2′ படத்தில் நடித்து வருகிறார். சொகுசு கப்பல் ஒன்றில் நடக்கின்றன கதை இது என்கின்றனர். இந்த படத்தில் சந்தானத்துடன் `நிழல்கள்’ ரவி, `லொல்லு சபா’ மாறன், கிங்ஸ்லி, முனீஸ்காந்த், சாய்தீனா என அவரது வழக்கமான டீம் நடிகர்களும் இருக்கிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இம்மாத இறுதியோடு ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’ படப்பிடிப்பு நிறைவடைகிறது. பொங்கலை முன்னிட்டு, படத்தின் தலைப்பை அறிவிக்கின்றனர்.
‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’ என்றில்லாமல் ஃப்ரெஷ்ஷான டைட்டில் ஆக இருக்கும். என்கின்றனர். இதனை முடித்துவிட்டே அடுத்த படத்திற்கு செல்கிறார் சந்தனாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். விஜய்யின் படத்தில் அவர் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. அப்படி அவரிடம் யாரும் நடிக்கக் கேட்கவும் இல்லை. இப்படி ஒரு தகவலை யார் கிளப்பியது என்றே தெரியவில்லை என்கிறது அவரது தரப்பு.