புதுடெல்லி: கடும் குளிர் காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை அடர் பனி மூட்டம் நிலவியதால், டெல்லியில் 100 விமான சேவைகள் தாமதமாகின. வட இந்தியாவில் பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
விமான சேவை கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகள் படி, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் 60 விமானங்கள், வந்து சேர வேண்டிய 193 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில், அங்கிருந்து புறப்பட வேண்டிய 17 விமானங்களும், வர வேண்டிய 36 விமானங்களும் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடர் பனி மூட்டம் போர்வை போல இருந்ததால் டெல்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை எதிரிலிருக்கும் காட்சிகள் எதுவும் தெளிவாக தெரியவில்லை என்பதால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், அடர் பனி மூட்டம் காரணமாக நீண்ட தூர ரயில் சேவைகள் உட்பட குறைந்தது 24 ரயில்கள் தாமதமாக வந்து செல்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவைகளில் சில நான்கு மணி நேரம் தாமதமாக செல்கின்றன.
பனி மூட்டம் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் தனியார் பேருந்தும் லாரியும் மோதியதில் சுமார் 20 முதல் 25 பயணிகள் காயமடைந்தனர்.
தேசிய தலைநகர் பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பனி பாதிப்பு நிலவுகிறது. நகரின் அதிகபட்ச வெப்ப நிலை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் மற்றும் மிகவும் அடர் பனி மூட்டம் காணப்படும் என்றும் கணித்துள்ளது.
நொய்டாவில் மறு உத்தரவு வரும் வரையில் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பிஹார் மாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவிவருகிறது. பிஹாரில் தலைநகர் பாட்னா உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அங்கு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. ஜன.6ம் தேதி வரை பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.