தருமபுரி: “அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாகும். துறை சார்ந்த அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்கின்றனர். நடவடிக்கைக்கு உள்ளாகும் திமுக-வினரில் சிலர், பின்னர் நீதிமன்றம் சென்று விடுதலை ஆகின்றனர். நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கொண்டால், எப்படி அவர்கள் விடுதலையாக முடியும்,” என தருமபுரியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா ஆலய வளாகத்தில் வழிபட, கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று (டிச.3) நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்னதாக கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பது நாடறிந்த விவரம். நாடெங்கும் இன்று பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்தை ஆளும் திமுக அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர்களை அடக்கி வைக்காதது தான் இதற்கெல்லாம் காரணம். கட்சியிலும், ஆட்சியிலும் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களை தட்டிக் கேட்கிற அருகதை கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் இத்தனை பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பரிதாப நிலைக்குக் காரணமும் திமுக நிர்வாகிகள் தொடர்பு தான். இன்று, ‘யார் அந்த சார் ?’ என்று பலரும் கேட்கும் நிலையில், அவர் யார் என்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாக சொல்லி விட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், தமிழக அரசு மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜக-வின் மகளிர் அணி சார்பில் மதுரையில் தொடங்கி 8 நாள் நீதி கேட்டு பயணம் மேற்கொள்கிறோம். முடிவில் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம். ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடைபெறும்.
திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக தனித்தனியாகப் போராடுவதை விட ஒன்றிணைந்து தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க போராடலாம். கட்சிகள் நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுண்டு கிடப்பதால் தான் அரசாங்கத்துக்கு பயமில்லை. திருச்செந்தூர் வேல் காணவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். அவர் செய்தால் நியாயம், பாஜக நீதி கேட்டு பயணம் நடத்தினால் அனுமதி மறுப்பதா? அரசின் தடைகளை தகர்த்து விட்டு ஆளுநர் மாளிகை வரை மகளிர் அணியின் நீதி கேட்கும் போராட்டம் நடைபெறும். நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராடினால் நாட்டு மக்களை பாதுகாக்கலாம்.
அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாகும். துறை சார்ந்த அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்கின்றனர். நடவடிக்கைக்கு உள்ளாகும் திமுக-வினரில் சிலர், பின்னர் நீதிமன்றம் சென்று விடுதலை ஆகின்றனர். நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கொண்டால், எப்படி அவர்கள் விடுதலையாக முடியும்.
தமிழகத்தில் மட்டும் தான் திருடன் சிக்கிக் கொண்டால், மற்றொருவரை பார்த்து ‘திருடன் திருடன்’ என்று கூறி தப்பிக்க நினைக்கும் வழக்கம் உள்ளது. சோதனை நடைபெறும்போது தன்னிடம் தவறில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும். சோதனைக்கு வருவோர் பார்த்துவிட்டு செல்லட்டும். இதில் எங்கிருக்கிறது அரசியல்?நகராட்சி, பேரூராட்சி விரிவாக்க நடவடிக்கை என்பது அனைத்து ஆட்சிகளிலும் தொடரும். இதற்காக ஆட்சியாளர்களை குற்றம் சாட்ட முடியாது. தரம் உயரும்போது பாதிப்பு, பலன் ஆகிய இரண்டும் ஏற்படும்.
அதேநேரம் முறையான நிர்வாகம் இல்லை என்பதால் தான் மக்கள் வெறுப்படைகின்றனர். மத்திய அரசு உள்ளாட்சி நிர்வாகங்களின் மேம்பாட்டுக்காக ஏராளமாக நிதி வழங்குகிறது. ஆனால், மாநில அரசின் தவறுகளால் தான் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. அதையொட்டியே, தரம் உயர்வு, கிராமங்கள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர்.” என்று அவர் கூறினார். அப்போது, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், நிர்வாகிகள் முருகன், வெங்கட்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.