மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
அப்படிப்பட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் பிளேயிங் 11-ல் இடம் பெறும் அஸ்வினுக்கு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை.
இந்நிலையில் அஸ்வின் வெளிநாடுகளுக்கு செட்டாக மாட்டார் என்று முத்திரை குத்தி இந்திய அணி நிர்வாகம் இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற வைத்தது தமக்கு ஏமாற்றமாக அமைந்ததாக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:– “ரவிச்சந்திரன் அஸ்வின் மேட்ச் வின்னர். அவர் தன்னுடைய கெரியர் முழுவதும் அசத்தியவர். ஒவ்வொரு முறையும் அவர் தன்னைத்தானே மெருகேற்றி எந்த சூழ்நிலையிலும் பேட்ஸ்மேன்களை திணறடிக்க முயற்சித்ததை பார்த்திருப்பீர்கள். 14 – 15 வருடங்கள் விளையாடிய எந்த வீரரிடமும் நீங்கள் அதை பார்ப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஜடேஜாவும் அவரும் வெளிநாடுகளில் ஜோடியாக ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியிருக்க வேண்டும். அஸ்வின் தாம் விளையாடிய எந்த வகையான மைதானங்களிலும் விக்கெட்டுகளை எடுத்தார். அவர் இந்திய துணை கண்டத்தில் மட்டுமே அசத்தக்கூடியவர் என்று கருதப்பட்டது நியாயமற்றது. அப்படி நீண்ட காலம் விளையாடியவர்கள் வெற்றிகரமாக வழி அனுப்புவதற்கு தகுதியானவர்கள்.
ஆனால் அதைப் பெறாமல் அஸ்வின் வெளியேறிய விதம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. கடந்த காலங்களில் நிறைய வீரர்கள் இப்படி வெளியேறியுள்ளார்கள். அஸ்வின் போன்றவர் உருவாக்கியுள்ள வரைமுறைகளில் மற்றவர்கள் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அவர் இந்திய அணிக்காக வேறுபாடு இல்லாமல் சேவை செய்தவர்” என்று கூறினார்.