பெங்களூரூ: கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு தொடர்பு இருப்பதால் வழக்கில் அவரது பெயரை சேர்க்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள பல்கியை சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). குல்பர்கா மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவர் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், “ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு நெருக்கமான ராஜு காபனூருக்கும் எனக்கும் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. எனக்கு ஒப்பந்த திட்டங்களை வாங்கி தருவதாக கூறி ராஜு காபனூர் ரூ.15 லட்சம் ஏமாற்றி விட்டார். மேலும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதால், தற்கொலை முடிவை எடுத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து குல்பர்கா போலீஸார் ராஜு காபனூர் மீது 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே கர்நாடக அரசு இவ்வழக்கை சிஐடி விசாரணை மாற்றியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், “இந்த தற்கொலைக்கும் அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். வழக்கில் அவரது பெயரை சேர்க்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உயிரிழந்த சச்சின் பாஞ்சால் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்” என்றார்.