சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் அனுமதி பூங்காவாக திகழ்வதாகச் சொல்கிறார். ஆனால், தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் 2022-ம் ஆண்டு குற்ற தரவுகள் அறிக்கையில், 2021-ம் ஆண்டை காட்டிலும் தமிழகத்தில் 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8.29 சதவீதம் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 32.89 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பவங்கள் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக பதிவுகளில், தமிழகத்தின் குற்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் இருக்க, பல்வேறு விதமான புகார்கள் மீது போலீஸார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 500 அரசு பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் ஏன் சிஎஸ்ஆர் நிதிவழங்க வேண்டும். இது, அரசு செய்ய வேண்டிய வேலை. இதற்கு பதிலாக, நடுத்தர மாணவர்களின் கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் குறைக்கலாம். திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆயிரம் பள்ளிகளை சீரமைப்போம் என்றார்கள்.
எவ்வளவு பள்ளிகள் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளது என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். பொங்கல் பண்டிக்கைக்கு பரிசுத் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும். யார் பணத்தையும் நாங்கள் கேட்கவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கியதைதான் கேட்கிறோம்.
இந்த ஆண்டு, தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறது. இதை என்ன செய்ய போகிறார்கள். பரிசுத் தொகை வழங்கும் வரை இந்த விஷ யத்தை விடமாட்டோம். நான் செருப்பு போடாமல் இருப்பதும், சவுக்கடி போராட்டம் நடத்தியதும் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். இதை, நடுத்தர மக்கள் தற்போது பேசி வருகிறார்கள். இது அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கும் 4 வயதில் பெண் குழந்தை உள்ளார். அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகம் சென்று படிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவிக்கு வன்கொடுமை சம்பவம் நடந்திருப்பது, அங்கு சிஸ்டம் தோல்வி அடைந்ததைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி உள்பட பலர் இருந்தனர்.