Rohit Sharma Retirement | இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த் மைதானத்தில் இவரது தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், 2வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பை ரோகித் ஏற்ற நிலையில் அடுத்தடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிக மோசமாக ஆடியது.
ஒரு டிரா, 2 போட்டிகளில் தோல்வி என 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இப்படியான இக்கட்டான நெருக்கடியில் தான் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றிருக்கிறார். டாஸ் போட வந்த அவர், ரோகித் சர்மா நீக்கப்படவில்லை, அவருக்கு அணி நிர்வாகம் ஓய்வளித்துள்ளது என விளக்கமளித்தார். இருப்பினும் அவர் மோசமான பார்ம் காரணமாக தான் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அதுமட்டும்மல்லாமல் இதுவே ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் இருக்கலாம். ஏனென்றால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தால் அல்லது தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது. அதுமட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி வசம் இழக்க நேரிடும். இப்படியான சூழலில் மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பு ரோகித்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் ஒப்படைக்காது. எனவே 37 வயதாகும் கேப்டன் ரோகித் சர்மா மெல்போர்ன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி தான் அவருடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது.
இதையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்த்ததும் பேசிய அவர், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் இதுதான், மெல்போர்ன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி தான் அவருடைய சர்வதேச கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என அதிரடியாக கூறியுள்ளார். இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டு விளையாடிய 14 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் வெறும் 619 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
அதனால் 37 வயதாகும் ரோகித் சர்மாவுக்கு இனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது சிரமமான காரியம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்ட கேப்டன் என்ற அவப்பெயரும் ரோகித் சர்மா வசம் இப்போது வந்து சேர்ந்திருக்கிறது.