போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேர் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனையானது இஸ்லாமிய சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்களை போதைப்பொருளின் பிடியிலிருந்து காக்கும் நோக்கத்தில் கடும் தண்டனைச் சட்டம் இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சவுதி அரேபியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தண்டனை எப்போது நிறைவேறறப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஈரான் வெளியுறவுத்துறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக சவுதி தலைநகர் ரியாத்துக்கு பிரதிநிதிகள் குழுவை அரசு சார்பில் அனுப்பப் போவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.