சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!

ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்டராகவும் ரோகித் சர்மாவிற்கு சமீபத்திய போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி. பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. இந்த தொடர் முழுவதும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க திணறி வருகிறார். மேலும் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்ற அழுத்தம் எழுந்துள்ளது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வெற்றி அணியை பெற செய்தார். பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார், ஆனால் அந்த தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு, டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால், ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ பரிசளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியை நடத்திய அனுபவம் உள்ளதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா பேட்டராக தொடர்வாரா இல்லையா என்பது அந்த சமயத்தில் முடிவு செய்யப்படும். ஹர்திக் பாண்டியா அழுத்தமான சூழ்நிலைகளை சிறப்பாக கையாளக்கூடிய திறன் கொண்டவர், மேலும் அவர் ஒரு ஆல்ரவுண்டாக இருப்பதால் அணிக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் சூர்யாகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடியதில்லை, எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்தபடியாக ரிஷப் பந்த் மற்றும் சுப்மான் கில் அணியில் உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மான் கில் வழி நடத்தி இருந்தார், ஆனால் அவரின் கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் ரிஷப் பந்திற்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்பதால் இருவருக்கும் கேப்டன் பதவியை வழங்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ரோஹித் சர்மா இல்லாத பட்சத்தில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.