சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர்.
சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 2000-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். அவரது மகன் பஷார் அல் அசாத் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலையில் சிரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார்.
இந்த சூழலில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) என்ற கிளர்ச்சிக் குழு பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அதிபர் ஆசாத் சிறப்பு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார்.
ஈரானின் ஏவுகணை ஆலை: சிரியாவை ஆட்சி செய்த ஆசாத், ஈரானின் கைப்பாவையாக செயல்பட்டு வந்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது கடந்த 2017-ம் ஆண்டில் மேற்கு சிரியாவின் மஸ்பாயா பகுதியில் உள்ள மலையில் ஈரான் இன்ஜினீயர்கள் சுமார் 130 அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஏவுகணை உற்பத்தி ஆலையை அமைத்தனர். கடந்த 2021-ம் ஆண்டில் ஏவுகணை உற்பத்தி தொடங்கப்பட்டது.
இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 300 ஏவுகணைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இவை ஆசாத் படை மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த ரகசிய ஏவுகணை தயாரிப்பு ஆலையை இஸ்ரேல் உளவாளிகள் கடந்த 2023-ம் ஆண்டு இறுதியில் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இஸ்ரேல் ராணுவத்தின் ஷால்டாக் படைப்பிரிவை சேர்ந்த 100 கமாண்டோக்கள் மற்றும் யூனிட் 669 படைப்பிரிவை சேர்ந்த 20 வீரர்கள் 4 ஹெலிகாப்டர்களில் சிரியாவின் ரகசிய ஏவுகணை தயாரிப்பு ஆலைக்கு புறப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக்காக 21 போர் விமானங்கள், 5 ட்ரோன்கள், 14 உளவு போர் விமானங்களும் அணிவகுத்து சென்றன.
சிரியா ராணுவத்தின் ரேடாரில் இருந்து தப்ப மத்திய தரைகடல் வழியாக இஸ்ரேல் கமாண்டோக்கள் ஏவுகணை தயாரிப்பு ஆலைக்கு சென்றனர். ஹெலிகாப்டரில் இருந்து தரையிறங்கியதும் இஸ்ரேல் கமாண்டோக்கள் இரு அணிகளாக பிரிந்தனர். ஓரணி சுரங்கத்தின் வாயிலில் இருந்த காவலர்களை சுட்டுக் கொன்று அங்கு பாதுகாவலில் ஈடுபட்டது.
மற்றொரு அணி சுரங்கத்துக்குள் நுழைந்து ஏவுகணை தயாரிப்பு ஆலை முழுவதும் சுமார் 300 கிலோ வெடிமருந்துகளை வைத்தது. இஸ்ரேல் வீரர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு ஏவுகணை தயாரிப்பு ஆலை வெடித்துச் சிதறி தரைமட்டமானது. இதன்பிறகும் இஸ்ரேல் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் இருந்து ஏவுகணை ஆலையின் மீது குண்டுகளை வீசின.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: மேற்கு சிரியாவின் மஸ்பாயா பகுதி மலையில் ஈரான் அமைத்திருந்த ஏவுகணை ஆலையை தகர்க்க சுமார் 2 மாதங்கள் இஸ்ரேல் ராணுவ கமாண்டோக்கள் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். சிரியா ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி சிரியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டது. இதன்காரணமாக சிரியா ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் எல்லைப் பகுதிக்கு திரும்பியது.
இதை பயன்படுத்தி இஸ்ரேல் கமாண்டோக்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஏவுகணை ஆலைக்குள் எளிதாக நுழைந்து துல்லிய தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணி மற்றும் ஏவுகணை உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர். இஸ்ரேல் கமாண்டோக்களுக்கு சிறிய பாதிப்புகூட ஏற்படவில்லை.
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின்போது ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் கமாண்டோக்களை மீட்க 20 விமானங்கள், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏவுகணை தயாரிப்பு ஆலை வெடித்துச் சிதறியபோது அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் அந்த நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன்படி சிரியாவின் அலெப்போ உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 5 ஆயுத கிடங்குகள் முழுமையாக அழிக்கப்பட்டன.