சுல்தான்பூர்: கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “அமைச்சர் அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் விஜய் மிஸ்ராவிடம் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா குறுக்கு விசாரணை நடத்தினார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா தெரிவித்துள்ளார்.