வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகர் மற்றும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம் வந்த இந்து அர்ச்சகரும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான சின்மயி கிருஷ்ணதாஸ் கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவானது. அவரது ஜாமீன் மனுவை மெட்ரோபொலிடன் மாஜிஸ்திரேட் கடந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் நீதிமன்றத்துக்கு வெளியே சிறை வாகனத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த மோதலில் சைபுல் இஸ்லாம் ஆலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.
சிறையில் இருக்கும் சின்மயி கிருஷ்ண தாஸ், சத்தோகிராம் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது காணொலி மூலம் நீதிமன்றத்தில் கிருஷ்ண தாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். தேசத் துரோக வழக்கு என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனுவை நீதிபதி சைபுல் இஸ்லாம் நிராகரித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கிருஷ்ண தாஸின் வழக்கறிஞர் அபூர்வ குமார் பட்டாசார்ஜி தெரிவித்துள்ளார்.