சென்னை: “தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச இஸ்லாமியர்கள் அசாம் – திரிபுரா எல்லை வழியாக தமிழகத்தில் ஊடுருவி வருகின்றனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். தொடர்ந்து இதே கருத்தை பல்வேறு முறை வலியுறுத்தி வந்த அவர், இம்முறை ஜவுளி துறையில் அதிகமாக வேலை செய்யும் நோக்கோடு தமிழகத்தில் ஊடுருவுகின்றனர் எனவும், போலி ஆதார் கார்டுகளின் மூலமாக அவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர் எனவும் எச்சரித்துள்ளார்.
வங்கதேச மக்கள் நமது நாட்டின் மக்களோடு மக்களாக வாழ்வதால் அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். மேலும் அவர்களுக்கு இங்குள்ளவர்கள் சிலர் அடைக்கலம் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது ஆபத்தானது. கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி திருப்பூரில் இரண்டு முறை எந்தவித ஆவணங்களும் இன்றி பத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை காவல்துறை கைது செய்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதை உறுதி செய்தது காவல்துறை. அதே போல தேசிய புலனாய்வு முகமை, திருப்பூர், பல்லடம் – வீரபாண்டி அருகே 11 வங்கதேசத்தினரை கைது செய்தது. இப்படி தொடர்கதையாக அந்நிய ஊடுருவல் அதிகரித்து வருகிறது.
வங்க தேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவன் அவிநாசியில் வேலை செய்து கொண்டே பூர்ணிமா என்ற இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, அந்தப் பெண்ணை கடத்திச் சென்றதுடன் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடினார். அவர் வங்கதேச எல்லையில் அந்த பெண்ணை கொடூரமாக கொலையும் செய்தார்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு ஜோய் ஆலுக்காஸ் நகை கடை திருட்டில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு NIA சோதனையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் கருநீளம் ஆகிய பகுதிகளில், போலி ஆதார் கார்டுகளுடன் தங்கியிருந்த 44 பேர் பிடிபட்டனர்.
வங்கதேச ஊடுருவலின் மூலமாக பயங்கரவாத தாக்குதலுக்கும் தமிழகத்தில் திட்டம் தீட்டப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் ஐஎஸ்ஐஎஸ்-ன் கிளை அமைப்பான ஜமா -அத் -உல் முஹாஜிதீன் பொறுப்பாளரான, லப்பூரை சேர்ந்த மஜ்னு என்கிற முசுருதீன் என்பவன் போலி ஆதார் கார்டின் மூலமாக திருப்பூரில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்தான். 2016-ம் ஆண்டு அவன் வேலைக்காக கொல்கத்தா சென்ற போது தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு அவனிடம் இருந்து பல்வேறு விதமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது மட்டுமன்றி வங்கதேசத்திலிருந்து கடல் வழியாகவும் நமது நாட்டுக்குள் நுழைகின்றனர். குறிப்பாக தமிழகத்தை குறிவைத்து ஏ.பி.டி. எனப்படும் வங்கதேச பயங்கரவாத அமைப்பு இவர்களை அனுப்புகிறது.தமிழகத்தில் உலவி வரும் கஞ்சா, அபின், ரசாயன போதை பொருள் புழக்கத்துக்கும் இந்த கும்பல் காரணமாக இருக்கிறது.
தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் ஜவுளித் துறையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற இவர்கள் முன் வருவதால், இவர்கள் யார் என்று தெரியாமலேயே பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். தமிழக அரசுக்கோ, காவல் துறைக்கோ வங்கதேசத்திலிருந்து வருபவர்களை கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் சிறப்பான திட்டங்கள் எதுவும் இல்லை. இதுவரை பிடிபட்ட பெரும்பாலான வங்கதேசத்தினரை என்ஐஏ அமைப்புதான் கண்டுபிடித்துள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.