வறுமை ஒழி்ப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வு வாயிலாக, வறுமை ஒழிப்பில் இந்தியாலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 40 மாதங்களில் மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் மூலம் 1,83,610 கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் 2.08 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், ரேஷன் கடகள் மூலம் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2 .07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன. புதிதாக 1,666 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநில, மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு வளர்க்கப்பட்டது. நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 1.08 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விருப்ப அடிப்படையில், அரிசிக்கு பதில் கோதுமை வழங்கப்படுகிறது.
2023-ல் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 23 .18 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதேபோல, அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 6,36,971 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம், 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 13.34 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகள் 233 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 591 ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டிடங்கள் ரூ.100 கோடியில் கட்ட அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ.358.78 கோடியில் 259 மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்களைக் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, 213 நெல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.