சுயாதீன இசைக்கலைஞர்கள் பலரும் இப்போது இணையவெளியில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வாரந்தோறும் ஒரு சுயதீன ஆல்பம் நம்மை வைப்பாக்குகிறது. இதோ அடுத்ததாக வந்துவிட்டது சாமுவேல் நிக்கோலஸின் `ஐயையோ’ என்ற சுயாதீன பாடல். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன். தந்தையோடு இசை வேலைகளை கவனித்து வந்து சாமுவேல் நிக்கோலஸ் தற்போது இந்த சுயாதீன பாடல் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டுடியோவில் துள்ளலான வைப்பில் சுற்றிக் கொண்டிருந்த இந்த இளைஞரை சந்தித்துப் சாட் போட்டோம்.
ஹாரிஸ் ஜெயராஜ் மகன் அறிமுகமாகிறார்னு நீங்க பண்ற வேலைகள்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்! பாடல் வந்திருச்சு, எப்படி உணர்றீங்க?
2 வருஷமாக இந்த மாதிரி ஒரு பாடல் வெளியிடலாம்னு திட்டமிட்டோம். இப்போ வெளியாகிருச்சு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. வீட்டுலையும் எல்லோருக்கும் பாடல் பிடிச்சிருக்கிறதாக சொன்னாங்க. அதுக்கு மேல என்ன வேணும்! எல்லோரும் எனக்கு கால் பண்ணி பாடல் ரொம்ப நல்லா வந்திருக்குனு சொல்றாங்க. அதுமட்டுமல்ல மெசேஜ்ல பாடல் ரொம்ப ஃப்ரஷாக இருப்பதாகவும் வாழ்த்துறாங்க. பாடல் வேலைகளெல்லாம் முடிஞ்சதும் இதை வீடியோவாக எடுத்தாகணும். அப்போ சுயாதீனமாகதான் பண்றோம். நம்மளே டான்ஸ் பண்ணிடுவோம், ஜாலியாக இருக்கும்னு நான் நினைச்சேன். அப்பாவும் பாடல் கேட்டுட்டு ரொம்ப ப்ரஷாக இருக்குனு பாராட்டினாரு!
சுயாதீன இசைக்கலைஞர்கள் பலரும் இப்போ கலக்கிட்டு இருக்காங்க! மற்ற பாடல்கள்ல இருந்து உங்களுடைய `ஐயையோ’ பாடலை எந்தளவுக்கு வேறுபடுத்தி காட்டணும்னு முடிவு பண்ணீங்க!
சொல்லப்போனால், நான் 2000-ஸ் ரசிகன். என்னுடைய அப்பா, ரஹ்மான் அங்கிள், யுவன் அங்கிள்னு எல்லோருக்கும் நான் பயங்கரமான ஃபேன். அந்த மாதிரி ஒரு பாடல் பண்ணலாம்னுதான் திட்டம்போட்டேன். அந்த மாதிரி பாடல்கள் ஏன் இப்போ பண்றது இல்லைனு ஒரு எண்ணம் வந்தது. நானும் அப்படியான பாடல்களை ரொம்ப மிஸ் பண்றேன். எனக்கு இப்போ வர்ற பாடல்களும் ரொம்ப பிடிக்கும். ஆனால், அந்த மாதிரியான பாடல் மிஸ் ஆகுதுனு யோசிச்சு பண்ணின ஐடியாதான் இந்த `ஐயையோ’
அப்பாவோட நண்பர்கள் யாரும் இப்போ இந்த பாடலுக்கு பாராட்டினாங்களா?
இந்த பாடல் வெளியான அன்னைக்கு கெளதம் மேனன் அங்கிள் கால் பண்ணி, `சூப்பர் டா, இதே மாதிரியான விஷயங்கள் பண்ணு!’னு வாழ்த்தினாரு. பாடல் வெளியான அடுத்தநாள் பிரபுதேவா அங்கிளும் அப்பாவுக்கு கால் பண்ணி வாழ்த்தியிருக்காரு. அவர், `நம்ம நிக்கோலஸா இது. சின்ன வயசுல பார்த்தது. ரொம்பவே வெட்கப்படுவான். இப்போ கேமரா முன்னாடிலாம் டான்ஸ் பண்றான்’னு சொல்லியிருக்கார்.
மியூசிக்தான் கரியர்னு எந்த வயசுல முடிவு பண்ணீங்க?
சொல்லப்போனால், நான் இன்னும் முடிவு பண்ணிக்கிட்டேதான் இருக்கேன் (சிரித்துக் கொண்டே). இப்போ 12-ம் வகுப்பு முடிச்சதும்தான் மியூசிக்தான் என் கரியர்னு முடிவு பண்ணினேன். ஆனால், அதுக்கு முன்னாடியே இசை பற்றின புரிதல் இருந்தது. தனியாக ஒரு பாடல் பண்றதுக்கு நம்பிக்கை 12-ம் வகுப்புக்குப் பிறகுதான் வந்துச்சு. அப்போ ஒரு பாடல் பண்ணி அப்பாவுக்கு காமிச்சேன். அது அப்பாவுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. `இன்னும் நிறைய பாடல்கள் பண்ணு. பயிற்சி எடுத்துக்கோ’னு சொன்னாரு!
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துல அப்பாவோட ஒரு கான்சர்ட் நடந்திருந்தது. அப்போதான் ஹாரிஸ் சாரோட பையன் நீங்கனு வெளில தெரிய வந்தது! அந்த எனர்ஜி எப்படி இருந்தது?
முன்னாடிலாம் எனக்கு மத்தவங்க முன்னாடி பெர்ஃபார்ம் பண்றது பிடிக்காது. நான் என் ரூம்ல சும்மா எதாவது கம்போஸ் பண்ணீட்டு இருப்பேன். அந்த நேரத்துல அப்பாதான் `சும்மா பாடிட்டு இருக்கியே, வந்து கான்சர்ட்ல எதாவது பாடு’னு அப்பா கூப்பிட்டு ஆடிஷன் வச்சாரு. நான் பாடினதும் அவருக்கு பிடிச்சு கான்சர்ட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அங்க நான் பாடினதை பார்த்துட்டு பலரும் பாராட்டினாங்க. அப்பா, இந்த மாதிரி ஷோவாக இருந்தாலும், ஒரு பின்னணி பாடலுக்கான வேலையாக இருந்தாலும் ஒரு கம்போஸ்ராகதான் யோசிப்பாரு. எதாவது பாடலுக்கு என்னுடைய குரல் செட்டாகுதானு பார்ப்பாரு. செட் ஆகலைனா வேற சிங்கர் அப்பா கூப்பிட்டு பாட வச்சிடுவார்.
`பால் டப்பா’ அனிஷ் வச்சு அப்பா முதல்ல பண்ணின `His name is john’ பாடலுக்கு ஒரு மேளத்தை சேர்க்கலாம்னு ஒரு ஐடியாவை நீங்க கொடுத்ததாக கெளதம் மேனன் சொல்லியிருந்தாரு….
அவரு சும்மா க்ரெடிட் தர்றாரு (சிரிக்கிறார்). எனக்கு அந்தப் பாடலை கேட்கும்போது ஒரு குத்து ஃபீல் இருந்தது. பறையிசை சேர்க்கலாம். அப்போ ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கும்னு சொன்னேன். நான் வேற எதுவும் பண்ணல. அப்பாதான் எல்லாமே பண்ணினாங்க. நான் அப்பாகிட்ட முதன்முதல்ல ஒரு பாடல் பண்ணிக் காமிச்சதாக சொன்னேன்ல…அந்தப் பாட்டை கெளதம் அங்கிள்கிட்டையும் காமிச்சேன். அவருக்கும் அந்தப் பாடல் பிடிச்சிருந்தது.
சுயாதீன இசைக்கலைஞர்களுக்கான களம் இப்போ பயங்கரமாக விரிவடைஞ்சிருக்கு! உங்களைப் போல அடுத்தடுத்து வர்றவங்களுக்கு இந்த களத்தின் வெற்றி நிலை எந்தளவுக்கு நம்பிக்கைக் கொடுக்கும்?
ரொம்ப அற்புதமான விஷயம் இது. நான் புது புது பாடல்கள் கேட்க விரும்புவேன். இப்போ படம் வர்றதும் குறைஞ்சிடுச்சு. அதுல பாடல் இருக்கிறதும் குறைஞ்சுடுச்சு. அதுனாலதான் பலரும் இப்போ ஆங்கிலப் பாடல்களும், கே – பாப் பாடல்களும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதை தப்பாக நான் சொல்லல. நான் இப்போ என்ன மாதிரியான பாடல்கள் கேட்க விரும்புறேங்கிற ஒரு வெளிப்பாடுதான் இந்த `ஐயையோ’. இப்போ சுயாதீன இசையில கலக்கிட்டு இருக்கிற சாய் அபயங்கரை பிடிக்கும், பால் டப்பாவை பிடிக்கும். அசல் கோளாருடைய மிகப்பெரிய ஃபேன் நான். பால் டப்பா அப்பாகூட இரண்டு பாடல்கள் பண்ணிட்டாரு. `His name is John’ பாடலோட ரெக்கார்டிங் சமயத்துல நான் இருந்தேன். அவர் அப்பா சொல்ற விஷயத்தையெல்லாம் டக்குனு எடுத்துட்டு முடிச்சிடுவாரு. கடந்தாண்டு நடந்த அப்பாவோட கான்சர்ட்ல ஃபெர்ஃபார்ம் பண்றதுக்கு திப்பு அங்கிள் வந்திருந்தாங்க. அப்போ சாய் அபயங்கரையும் அழைச்சிட்டு வந்தாங்க. அப்போ நான் அவரை மீட் பண்ணினேன்.
ஹாரிஸ் சாரோட ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்கள்ல அவரை செல்லமாக மாம்ஸ்னு அழைப்பாங்க. நீங்க அப்பாகிட்ட அந்த மீம்ஸை காட்டுவீங்களா?
நான் அதெல்லாம் பார்த்திருக்கேன். ஆனால், அதை அப்பாகிட்ட காட்டுனது கம்மிதான். ஆனால், அந்த விஷயத்தை வச்சு அதிகமாக பேசுவோம். நான் அப்பாவை மாம்ஸ்னு கலாய்ப்பேன். `அப்பா மாம்ஸ்னா நீங்க அத்தையா’னு அம்மாகிட்ட கிண்டலாக சொல்வேன். அப்பா அந்த விஷயத்தைப் பார்த்து பயங்கரமாக சிரிப்பாரு. முன்னாடிலாம் `எங்க இருந்து இது வந்துச்சு’னு யோசிப்பாரு. இப்போ `நான் மியூசிக் பண்ண தொடங்கின சமயத்துல இவங்க எல்லாம் சின்ன பசங்கதான். இப்போ அவங்க அப்பா வயசுதான எனக்கும். ஜென் – சி பசங்க மாமானு கூப்பிடுறது சகஜம்தான். நல்லா இருக்கு’னு சொல்றாரு!