ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததில், 7 பேர் உயிரிழந்தனர். கனமழையால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மழை வெள்ள சேதத்தை மத்தியக் குழு பார்வையிட்டுச் சென்றதை தொடர்ந்து, ரூ.6675 கோடி நிவாரணத்தொகையை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ரூ.944.80 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்தது.
இதற்கிடையில், தமிழக அரசு ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கைப் பேரிடராக அறிவித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.