அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 6 இந்திய வம்சாவளி எம்பிக்கள் பதவியேற்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

அதிபர் தேர்தலுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள 435 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை எட்ட 218 எம்பிக்களின் ஆதரவு தேவை. குடியரசு கட்சி 220 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றது. ஜனநாயக கட்சிக்கு 215 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

புதிய எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் சுகாஸ் சுப்பிரமணியம், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ஸ்ரீ தானேதர் ஆகிய 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அமி பெரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு காலத்தில் பிரதிநிதிகள் சபையில் நான் மட்டுமே இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பியாக இருந்தேன். இப்போது என்னையும் சேர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்பிக்களாக பதவியேற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் நிச்சயமாக உயரும்” என்று தெரிவித்துள்ளார்.

சுகாஷ் சுப்பிரமணியன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “119-வது பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீதானேந்தர் கூறும்போது, “மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவைத் தலைவர் தேர்தல்: அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று அவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் மைக் ஜான்சனும், ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜேப்ரியும் போட்டியிட்டனர். இதில் 218 வாக்குகள் பெற்று குடியரசு கட்சியை சேர்ந்த மைக் ஜான்சன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹக்கீம் ஜேப்ரிக்கு 215 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

பிரதிநிதிகள் சபையின் புதிய அவைத் தலைவர் மைக் ஜான்சனுக்கு புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் அதிபர் முதலிடத்திலும் துணை அதிபர் 2-ம் இடத்திலும் உள்ளனர். நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் 3-வது இடத்திலும் உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.