கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள மதுகிரியின் காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராமச்சந்திரப்பா (50). கடந்த வாரம் மதுகிரியைச் சேர்ந்த 36 வயதான பெண் ராமசந்திரப்பாவை காவல் நிலையத்தில் சந்தித்து நிலத் தகராறு தொடர்பான புகாரை அளித்தார்.
அப்போது அவர் அந்த பெண்ணை தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கர்நாடக காவல் துறை டிஜிபி அலோக் மோகன், மதுகிரி டிஎஸ்பி ராமசந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க துமகூரு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ராமசந்திரப்பா மீது வழக்கு தொடர்ந்து, நேற்று மாலை அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.