கோவை: கோவை சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் எல்.பி.ஜி சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு, கோவை கணபதியில் உள்ள காஸ் குடோன் நோக்கி ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று (ஜன.3) அதிகாலை வந்த லாரி உப்பிலிபாளையம் சாலை நோக்கி திரும்ப முயன்ற போது, லாரிக்கும், அதன் டேங்கருக்கும் இடையே இருந்த ஆக்சில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து லாரியில் இருந்து டேங்கர் தனியாக பிரிந்து, சாலையில் விழுந்தது. கீழே விழுந்த டேங்கரில் இருந்து எரிவாயு கசிந்தது. தகவலறிந்து மாநகர போலீஸார், தீயணைப்புத் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் அங்கு வந்து, எரிவாயு கசிவை அடைத்து, சுமார் 11 மணி நேரம் போராடி கீழே விழுந்த டேங்கரை மீட்டு, மாற்று லாரியுடன் இணைத்து பீளமேட்டில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் சுமார் 11 மணி நேரம் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
அதில், வழக்கமாக கேரளாவில் இருந்து வரும் காஸ் டேங்கர் லாரிகள், எல் அன்ட் டி புறவழிச்சாலை வழியாக, நீலாம்பூர் சென்று, அவிநாசி சாலையை அடைந்து, பயனீர் மில் சாலை அல்லது டைடல் பார்க் சாலை வழியாக கணபதியில் உள்ள குடோனுக்குச் செல்லும். ஆனால், இந்த வழித்தடத்தை மாற்றி விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக நகருக்குள் இந்த டேங்கர் லாரியை ஓட்டுநர் ஓட்டி வந்தது தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் இருக்கும் சமயத்தில் விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன.
தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய காஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன்(29) மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல், வெடிப்பொருள் தடுப்புச் சட்டம், எரிவாயு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்தனர். பின்னர், நேற்று (ஜன.3) இரவு அவரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.