வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைப் பொருத்தவரையில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
இதற்கு முன்னரே தயாராகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கான வேலையை ஏற்கெனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில், பாஜக தற்போதுதான் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து பாஜகவின் முன்னாள் எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங் வர்மா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வர்மா கூறுகையில், “ கட்சி என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. டெல்லியில் நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, யமுனையை சுத்தப்படுத்தல், காற்று மாசை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட முக்கியமான பணிகள் அனைத்தும் டெல்லியில் பாஜக அரசு ஆட்சியமைத்தவுடன் உடனடியாக செயல்படுத்தப்படும்” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த டெல்லியின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பிஜ்வாசன் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
அதேபோன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகி பாஜகவில் சேர்ந்த அர்விந்தர் சிங் லவ்லிக்கும் டெல்லி தேர்தலி்ல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.