டொனால்டு ட்ரம்ப் ஓட்டல் மீது தீவிரவாத தாக்குதல்?

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்தது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இது 64 மாடிகள் கொண்டதாகும். கடந்த 1-ம் தேதி இந்த ஓட்டலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா நிறுவனத்தின் சைபர்டிரக் கார் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டல் கட்டிடத்துக்கு லேசான பாதிப்புகள் ஏற்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக எப்பிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ட்ரம்ப் ஓட்டல் முன்பு தீப்பிடித்து எரிந்த காரை மேத்தியூ (37) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவரது காரில் வெடி மருந்துகள், எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல் ஆகியவை இருந்துள்ளன. செயலி வாயிலாக டெஸ்லா நிறுவனத்தின் சைபர்டிரக் காரை மேத்யூ வாடகைக்கு எடுத்து சுமார் 1,000 கி.மீ. கடந்து ஓட்டலுக்கு வந்துள்ளார். வரும் வழியில் அவர் வெடிமருந்துகள், எரிவாயு சிலிண்டர், பெட்ரோலை வாங்கி உள்ளார். அதோடு துப்பாக்கியும் வாங்கியிருக்கிறார். காருக்கு தீ வைத்துவிட்டு அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தற்கொலை செய்து கொண்ட மேத்தியூ அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி இருக்கிறார். அப்போது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரின் குடும்பம் அமெரிக்காவில் குடியேற உதவி செய்திருக்கிறார்.

தற்போது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மேத்தியூ, ட்ரோன் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்தார். அமெரிக்க ராணுவம் சார்ந்த பல்வேறு ரகசிய தகவல்கள் அவருக்கு தெரியும். ஜெர்மனியில் இருந்து விடுமுறையில் அமெரிக்கா திரும்பிய அவர், ட்ரம்புக்கு சொந்தமான ஓட்டல் முன்பு காருக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மேத்தியூவுக்கு இருமுறை திருமணம் நடந்துள்ளது. 2-வது மனைவி சில நாட்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தற்கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கியது. அப்போதுமுதலே உக்ரைனின் தீவிர ஆதரவாளராக மேத்தியூ செயல்பட்டு உள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதியுதவிவை நிறுத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் முழுஆதரவு அளித்துள்ளார்.

இதன்காரணமாக எலக் மஸ்க்கின் டெஸ்ஸா நிறுவன காரை வாடகைக்கு எடுத்து ட்ரம்ப் ஓட்டல் மீது மேத்தியூ தாக்குதல் நடத்தினாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

மேத்தியூவின் கார் எரிந்த அதே ஜனவரி 1-ம் தேதி அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஷம்சாத் (42) என்பவர், மக்கள் கூட்டத்தில் லாரியை மோதி கொடூர தாக்குதல் நடத்தினார். இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய ஷம்சாத் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். எனவே மேத்தியூவுக்கும் ஷம்சாத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.