புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு தடிகளுடன் பயிற்சி அளிப்பது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளித்துள்ளார்.
இந்துத்துவாவின் தலைமை அமைப்பாக இருப்பது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்). இதன் தொண்டர்களுக்காகா, ‘கோஷ் வதன் (தெளிவான அழைப்பு)’ எனும் பயிற்சி முகாம் மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெறுகிறது. தசரா மைதானத்தில் நடைபெற்ற முகாமில் சுமார் 1,000 தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார்.
தனது உரையில் அவர், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்தும், பயிற்சியின்போது தடிகளை பயன்படுத்துவதற்கானக் காரணங்களையும் விளக்கினார். இது குறித்து தனது உரையில் பேசும்போது, “இதுபோன்ற பயிற்சி முகாம்களில் நம் தொண்டர்கள் கைகளில் தடிகள் அளிக்கப்படுகிறது. இது, பார்ப்பவர்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. மாறாக, தைரியத்தை ஊட்டவே தடிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த தடியை வைத்திருப்பதால் ஒருவருக்கு அச்சம் நீங்கி தைரியம் ஏற்படுகிறது. மேலும், இந்த தடிகளின் மூலமாக தொண்டர்கள் அணிவகுப்பில் ஒரு சீரான வரிசையை இணைந்து கடைப்பிடிக்கிறார்கள். இந்தியா ஒரு முன்னணி நாடு. இந்தியா பின் தங்கும் நாடு அல்ல. உலகின் முன்வரிசையில் அமர்ந்து நம்மிடம் இருப்பதைக் காட்டலாம். ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் நல்லிணக்கம் போன்றவை பாரம்பரியத்தை கற்பிப்பதற்கான வழிமுறை ஆகும்” என்று அவர் பேசினார்.