`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்தார். அப்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது தலைவராக இருக்கும் செல்வகணபதி சரியாக செயல்படவில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வானதி சீனிவாசனிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆர்பாட்டத்தில் குஷ்பு

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழகத்தில் மாணவி ஒருவருக்கு கொடுமை நடந்திருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த நபர் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அந்த நபர், கைதுக்குப் பிறகு இன்னொரு நபர் குறித்தும் பேசியிருக்கிறார். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக, மதுரையில் குஷ்பு தலைமையில் பா.ஜ.க பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. அந்த செயலை கண்டிக்கும் விதமாக தமிழக ஆளுநர் அவர்களை சந்திக்க இருக்கிறோம்.

தமிழக அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் புரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் எஃப்.ஐ.ஆர் வெளியே வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்களுக்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் தெரிவிப்பேன்.

வானதி சீனிவாசன்

சமூக வலைத்தளங்களில் பெண்களை விமர்சித்தாலும், அதை யார் செய்தாலும் தவறுதான். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடைமுறைதான். போதிய ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவார்கள்” என்றவரிடம், `புதுச்சேரியில் பா.ஜ.க தலைவர் மாற்றம் குறித்து நிர்வாகிகள் ஏதும் கூறினார்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது” என்று முடித்துக் கொண்டார். அதேசமயம், தற்போது கட்சியின் தலைவராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருக்கும் செல்வகணபதி மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருப்பதால், விரைவில் அவர் மாற்றப்படலாம் என்கின்றனர் பா.ஜ.க வினர் சிலர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.