புதுடெல்லி: வட இந்தியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் (DIAL) அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடர் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளை பயணிகள் தெரிந்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகாலை 105 மணிக்கு அதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், #6இ பயண அறிவுறுத்தல்: எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு விமான நிலையத்தில் அடர் பனி மூட்டம் சூழ்ந்திருப்பதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமான இயக்கம் மீண்டும் தொடங்கும் போது விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்னும் தாமததம் ஏற்படலாம்.” என்று தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் அதிகாலை 1.16 மணிக்கு புதுப்பித்து வெளியிட்ட தகவலின்படி, டெல்லி மற்றும் வட இந்திய பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக எதிரில் இருப்பவர்கள் தெரியாத நிலை நீடிப்பதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் DIAL இயக்கப்படுகிறது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஆரஞ்சு அலார்ட்: டெல்லியில் சனிக்கிழமை மிகவும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் என்று கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இது 9.6 டிகிரி செல்சியசாக இருந்தது.
அதேபோல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மேற்குவங்கம் மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. புகைப் போர்வைபோல் சாலைகளில் அடந்த பனி மூட்டம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.