விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல் துறையினர், ஆலையின் போர்மேன் மற்றும் மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில், சாய்நாத் பட்டாசு ஆலை உள்ள இடம் சிவகாசி ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் சிவகாசி வனிதா ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர்கள் சசிபாலன் அவரது மனைவி நிரஞ்சனாதேவி ஆகியோர்களது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஆனால், உரிமத்தை மாற்றாமல் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் மற்றும் வனிதா ஃபயர் ஒர்க்ஸ் இணைந்து நடத்தி வருவதும், தங்களது சுயலாபத்துக்காக அதிக அளவிலான பட்டாசுகளை உற்பத்தி செய்யும் நோக்கில், ஒரே நேரத்தில் அதிக அளவிலான வெடிபொருட்களை கலவை செய்ததால் விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் பாலாஜி, வனிதா ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் சசிபாலன், அவரது மனைவி நிரஞ்சனா தேவி, வனிதா ஃபயர் ஒர்க்ஸ் போர்மேன் கணேசன், மேற்பார்வையாளர் சதீஷ்குமார், சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் போர்மேன்கள் பிரகாஷ், பாண்டியராஜ் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீஸார், கணேசன், சதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியது: “வேதிப்பொருள் கலவை செய்யும்போது உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விரிவான விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும். பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பயிற்சி கட்டாயம். உற்பத்தி தொடங்கிய ஒரு வாரத்தில் விபத்து நடந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் கூறிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.