விவசாயிகளுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவு அளித்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேறின. இதையடுத்து அந்த சட்டங்களுக்கான அறிவிக்கையை முதல் அரசாக கேஜ்ரிவால் அரசு கடந்த 2020 நவம்பரில் வெளியிட்டது. விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து பாஜகவுக்கு தங்களின் அடிமைத்தனத்தை காட்டுவதற்காக கேஜ்ரிவால் அரசு இதனை செய்தது.
தற்போது வேளாண் சட்டங்களை பின்வாசல் வழியாக பாஜக மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கேஜ்ரிவால் கூறுகிறார். இதன்மூலம் விவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார். எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு மலிவான அரசியல் லாபம் பெறுவதற்காக ஆம் ஆத்மி இவ்வாறு செய்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிவந்த கேஜ்ரிவால், வேளாண் சட்டங்களுக்கு அறிவிக்கை வெளியிட்டபோது அவரது இரட்டை நிலைப்பாடு மற்றும் விவசாயிகள் விரோதப்போக்கு அம்பலமானது. இவ்வாறு தேவேந்திர யாதவ் கூறினார்.
முன்னதாக அர்விந்த் கேஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில், “வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. புதிய கொள்கைக்கான நகலை மாநிலங்களுக்கு கருத்து கேட்டு அனுப்பியுள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பாஜகவே பொறுப்பு” என்று கூறியிருந்தார்.