சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் அதன் உரிமையாளர்கள் 10 நிமிடங்களில் அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முதல்முறை ஆயிரம் ரூபாய், இரண்டாவது முறை ரூ.2 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேலும் அதே நிலை நீடித்தால் குடியிருப்புவாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.
இதேபோல செல்லப்பிராணிகள் சிறுநீர் கழித்தால் ரூ.250 முதல் ரூ. 750 வரை அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை லிஃப்ட் வழியாக அழைத்துச் செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வளர்ப்பு பிராணிகளுக்கான விதிகளின்படி இந்த கட்டுப்பாடுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை பெருநகர 16-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் விலங்குகள் நல வாரிய விதிகளுக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், விலங்குகள் நலவாரிய விதிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களைக் கட்டுப்படுத்தாது என குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “விலங்குகள் நலவாரிய விதிகள் சட்டரீதியாக பிறப்பிக்கப்பட்டவை என்பதால் அவை தங்களைக் கட்டுப்படுத்தாது எனக்கூற முடியாது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் செல்லாது” எனக்கூறி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோல் வளர்ப்பு பிராணிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தடை விதித்துள்ளார்.