‘‘அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி’’ – ஹெச். ராஜா விமர்சனம்

மதுரை: அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் போதை பழக்கம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக செனட் உறுப்பினர் துணை முதல்வர் உதயநிதி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் அரசே மதுபானம் விற்று வரும் சூழலில் தமிழக முதல்வர் போதைக்கு இடம் கொடுக்காதீர்கள் என ஒரு தகப்பனாக இருந்து கேட்டுக்கொள்வதாக விளம்பரங்களில் பேசுகிறார். இது என்ன நியாயம்?

தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது. எல்லா சமுதாயத்தினரும் சாதி மத வேறுபாடு இல்லாமல் நம்முடைய குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். பள்ளி குழந்தைகளின் பைகளை சோதனையிடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. கோடி கணக்கில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது. திமுகவை போதை அணி, வன்கொடுமை அணி என இரண்டாக பிரிக்க வேண்டும்.

வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகின்றன. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் முதல்வர் விழாவில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய தடை விதித்த செயல் கண்டிக்கதக்கது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.