`12B’, `உள்ளம் கேட்குமே’, `உன்னாலே உன்னாலே’, போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.
அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ரீல்ஸ்களில் எவர்கிரீன் வைரலாக சுற்றி வருகிறது. இயக்குநர் ஜீவாவுக்குப் பிறகு இதோ சினிமா துறையில் அவருடைய மகள் சனா மரியம் களமிறங்கிவிட்டார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகனான சாமுவேல் நிகோலஸ் இசையமைத்திருக்கும் `ஐயையோ’ என்ற சுயாதீனப் பாடலின் வீடியோவை டைரக்டர் செய்தவர் சனா மரியம்தான். கூடிய விரைவில் அவர் திரைப்பட இயக்குநராகவும் தடம் பதிக்கவிருக்கிறார். வாழ்த்துகள் சொல்லி பேசத் தொடங்கினோம்…..
ஹாரிஸ் ஜெயராஜின் மகன் செய்த இந்தப் பாடலுக்கு எப்படியான உணர்வை விஷுவல் மூலமாக கொடுக்கணும்னு திட்டமிட்டீங்க?
என்னை அழைச்சு இந்த மாதிரியான ஒரு பாடல் ஹாரிஸ் சாரோட மகன் நிகோலஸ் பண்றாருன்னு சொன்னாங்க. ஹாரிஸ் சாருக்குப் பிறகு அவருடைய மகன் பாடல் கொடுக்கப்போறாருனு மகிழ்ச்சியில இருந்தேன். நிகோலஸ் என்ன மாதிரியான பாடல் பண்ணப்போறார்னு நான் எதிர்பார்க்கல. முதல் தடவை இந்தப் பாடலைக் கேட்கும்போதே நிச்சயமாக ஹிட் அடிக்கும்னு முடிவு பண்ணிட்டேன். அனைத்துத் தரப்பினரும் இந்த பாடலுக்கு டான்ஸ் பண்ணுவாங்கனு தோணுச்சு. நிகோலஸ் வயசு பசங்க எப்படி ஒரு பார்ட்டி பண்ணுவாங்கனு யோசிச்சு ஐடியா பிடிச்சு இந்தப் மியூசிக் வீடியோவைப் பண்ணினோம். அவ்வளவு முதிர்ச்சியோட இந்தப் பாடலைக் கொடுத்திருக்கார். 23 வயசு பையனா இந்தப் பாடலை பண்ணினதுனு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இயக்குநர் ஜீவாவின் மகள் மணிரத்னம் சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்கிறதாக ஜெயம் ரவி சொல்லியிருந்தாரு….
ஆமா, ஃபிலிம் ஸ்கூல் முடிச்சதும் எல்லோரைப் போலவே வேலைக்கு அப்ளை பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ மணி ரத்னம் சார் `செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் எடுத்துட்டு இருந்தாரு. பிறகு, நேர்காணல் அட்டென்ட் பண்ணி அவர்கிட்ட சேர்ந்து `பொன்னியின் செல்வன் 1, 2’னு இரண்டு பாகங்கள்ல வேலை பார்த்தேன். இப்போ நான் தனியாக படம் பண்றதுக்கான வேலைகள்ல இறங்கியிருக்கேன். மணி சார் ஸ்கூல்லதான் எல்லா விஷயத்தையும் நான் கத்துக்கிட்டேன். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களெல்லாம் ஃபிலிம் ஸ்கூல்ல படிச்சிட்டேன். மணி ரத்னம் சார்கிட்டதான் ஃபிலிம் மேக்கிங்னா என்னனு கத்துக்கிட்டேன். அது எனக்கு ஃபிஎச்.டி பண்ணின மாதிரியான உணர்வைக் கொடுத்தது. மணி ரத்னம் சார் தினமும் அர்ப்பணிப்போட கடினமாக உழைப்பாரு. ஓய்வில்லாமல் தினந்தோறும் புதுசாக பண்ணனும்னு யோசிச்சிட்டே இருப்பார்.
டைரக்ஷன் பக்கம் உங்களுக்கு ஆர்வம் எப்படி இருந்தது?
சின்ன வயசுல இருந்தே நான் செட்லதான் வளர்ந்தேன். அப்பா, அம்மானு இரண்டு பேரும் சினிமாவுலதான் இருந்தாங்க. அதை பார்த்து பார்த்து டீனேஜ்லையே சினிமா எண்ணம் எனக்கு வந்துடுச்சு.
இப்போ நீங்க ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிகோலஸ் பண்ணியிருக்கிற மியூசிக் வீடியோவை டைரக்ட் பண்ணியிருக்கீங்க! அப்பாவோட படங்களுக்கு ஹாரிஸ் சார்தான் மியூசிக் பண்ணுவார். அப்படி அப்பா ஹாரிஸ் பற்றி சொன்ன விஷயங்கள் எதாவது நினைவுல இருக்கா?
அந்த சமயத்துல எனக்கு ரொம்ப சின்ன வயசு. சில விஷயங்கள் அவங்க சொன்னது நினைவுல இருக்கு. அப்பாவுக்கு ஹாரிஸ் சார்கூட வேலை பார்க்கிறது ரொம்பவே பிடிக்கும். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துக் கொடுத்த ஆல்பம் எல்லாம் ஐகானிக்தான். அதுல `ஜூன் போனால்’ பாடல் கம்போஸ் பண்ணினது எனக்கு இன்னும் நினைவுல இருக்கு. அப்பாவும் ஹாரிஸ் சாரும் சேர்ந்த பண்ணின படங்கள்ல எனக்கு `12B’ படத்தோட ஆல்பம் ரொம்பவே பிடிக்கும். அந்த படத்துல வர்ற `லவ் பண்ணு’ பாடல் எனக்கு ஃபேவரிட்டான பாடல். ஹாரிஸ் சார் அந்தப் பாட்டை கம்போஸ் பண்ணின விதமும், அப்பா அதை எடுத்த விதமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ ரொம்ப வருஷம் கழிச்சு நானும் நிகோலஸும் சேர்ந்து வேலை பார்த்தது எனக்கு ரொம்பவே ஒரு ஸ்பெஷலான மொமன்ட்.
உங்க தந்தையோட படங்கள்ல எது உங்களுடைய ஃபேவரைட்?
அப்பா படத்துல வர்ற கதாபாத்திரங்கள் ஒரே டோன்ல இருக்கமாட்டாங்க. அவருடைய கதாபாத்திரங்களுக்கு ஒரு கிரே (Grey) ஷேட் இருக்கும். டைரக்ஷன் மட்டுமல்ல அப்பாவோட ஒளிப்பதிவு வேலைகளையெல்லாம் நான் அவ்வளவு ரசிப்பேன். அப்பா டைரக்ட் பண்ணின படங்கள்ல எனக்கு `உன்னாலே உன்னாலே’ எனக்கு ஃபேவரைட். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அந்தத் திரைப்படம் பிடிக்கும். அப்படி ஒரு ஐகானிக் திரைப்படம் அது. அந்தப் படத்துல வர்ற வினய் கதாபாத்திரமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியற்ற தன்மையோட இருக்கும். பல ஆண்களும் அந்தக் கதாபாத்திரத்தோட தங்களை கனெக்ட் பண்ணிப்பாங்க.
நீங்க இயக்குநராக அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வந்ததே, உண்மையா?
ஆமா, இந்த வருடத்துல படப்பிடிப்பு தொடங்கிடுவோம். எனக்கு அப்பா மாதிரி ஒரு லவ் ஸ்டோரி பண்ணி தொடங்கணும்னு ஆசை இருக்கு. ஆனால், அந்த ஐடியா எனக்கு நேச்சுரலாக வரவேயில்ல. கொஞ்ச கஷ்டப்பட்டு எழுதி இப்போ அந்தப் படத்தை பண்றதுக்குதான் பிளான் பண்றேன். `ஜென் – சி’ வைப் கலந்த படமாக கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…