நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் 4-ல் ஒரு இந்தியர் மட்டுமே பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பக்கவாத பாதிப்பு மற்றும் அதற்கான சிகிச்சை வசதி எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய ஆய்வை சிகாகோவைச் சேர்ந்த அசென்சன் சுகாதார மைய மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் ஐதராபாத் மருத்துவர் அருண் மித்ரா ஆகியோர் நடத்தினர். இந்த ஆய்வறிக்கை ‘இன்டர்நேசனல் ஜேர்னல் ஆஃப் ஸ்ட்ரோக் (ஐஜேஎஸ்) என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 85 முதல் 90 சதவீத பாதிப்பு, மூளையில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைவதால் ஏற்படுகிறது. இதை கரைக்க ஐவிடி( இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு கரைக்கப்படும். அல்லது இவிடி ( எண்டோவாஸ்குலர் சிகிச்சை) மூலம் உறைந்த ரத்தம் அகற்றப்படுகிறது.
நாடு முழுவதும் ஐவிடி சிகிச்சை அளிக்கும் மையங்கள் 566 உள்ளன. இவற்றில் 361 மருத்துவமனைகளில் இவிடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் 37 சதவீதம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ளன. இங்குள்ள மையங்களுக்கான இடைவெளி 115 கி.மீ முதல் 131 கி.மீ தூரத்துக்குள் உள்ளன.
கோவா, குஜராத், மகாராஷ்டிரா, தத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவற்றில் 28 சதவீத ஐவிடி மையங்களும், 31 சதவீத இவிடி மையங்களும் உள்ளன. வட மாநிலங்களில் ஐவிடி மற்றும் இவிடி மையங்கள் முறையே 20 சதவீதம் மற்றும் 18 சதவீம் என்ற அளவில் உள்ளன. மத்திய மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் 13.5 ஐவிடி மற்றும் 16 சதவீத இவிடி மையங்கள் உள்ளன.
பக்கவாத பாதிப்பு ஏற்படும் இந்தியர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே இந்த சிகிச்சை மையங்களுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் 90 சதவீத மக்களால், பக்கவாத சிகிச்சை மையங்களுக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடிகிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.