உத்தர பிரதேசத்தின் ரசூல்பூர் காவல் நிலையத்தில் 60 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதாக உறுதி மொழி எடுத்துள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டும் எனவும், இனி அதை செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தனர்.
பல்வேறு வித்தியாசமான கிரிமினல் குற்றங்களுக்கு பெயர்போனதாக உ.பி. கருதப்படுகிறது. இந்த அவப்பெயரை போக்கச் செய்யும்படி அதன் 75 மாவட்டங்களின் காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனால், தொடர்ந்து கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், குற்றம் புரிந்தவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதுடன் அவர்களது சொத்துகளையும் அரசு பறிமுதல் செய்து வருகிறது. அந்த வகையில், சில கிரிமினல்களை அழைத்து பேசி திருந்துவதாக உறுதிமொழி எடுக்க வைப்பதும் தொடங்கி உள்ளது.
உ.பி.யின் பெரோஸாபாத்தின் ரசூல்பூர் காவல் நிலையத்துக்கு நேற்று அப்பகுதியின் 60 கிரிமினல்கள் வரவழைக்கப்பட்டனர். புதிய ஆண்டான 2025-ல் குற்றங்கள் செய்யாமல், திருந்தி வாழும்படி அவர்களிடம் நகர எஸ்.பி.யான ரவி சங்கர் பிரசாத் அறிவுறுத்தினார். தாங்கள் செய்த குற்றச் செயல்களால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து 60 பேரும் வெளிப்படையாக பேசினர். இக்குற்றங்களை செய்தமைக்காக தங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், இனி, அதுபோல் செய்ய மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்தனர். இதை ஏற்று காவல் துறையினரும் அவர்கள் திருந்தி வாழ உதவுவதாக தெரிவித்தனர்.
இந்த கிரிமினல்கள் மீதான வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே செய்த குற்றங்களுக்கான தண்டனைக் காலங்களையும் இவர்கள் முடித்து கொண்டவர்கள் எனத் தெரிகிறது. எனவே, இதுபோன்ற கிரிமினல்களை திருந்தி வாழும் உறுதிமொழிக்காக தேர்வு செய்து அழைக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம், அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமல் தடுக்க முடியும் என்பது உ.பி. காவல் துறையின் நம்பிக்கையாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கை இதர மாவட்டங்களிலும் தொடர உள்ளது.