வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்கு பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற 8 மணி நேர சோதனையில் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ.28 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அமைச்சர் வீட்டில் 3 தளங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ரூ.8 லட்சம் பணம் அவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது.
44 மணி நேரம் சோதனை: கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை 3-ம் தேதி காலை தொடங்கி 44 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணிக்கு நிறைவு பெற்றது. சோதனையின்போது கம்ப்யூட்டர் ஒன்றின் மென்பொருள் கோளாறால் அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியவில்லை. பின்னர், சோதனையை முடித் துக்கொண்ட அதிகாரிகள் நள்ளிரவு 2.30 மணியவில் 8 கார்களில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது, அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கல்லூரியில் இருந்த பெருந்தொகை ஒன்றை எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை வரவழைத்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் 3-ம் தேதி இரவு வெள்ளை நிற வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தொகை அமலாக்கத் துறையின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தொகை கல்லூரியின் நிர்வாக செலவு. ஊழியர்களின் சம்பளம், பொங்கல் போனஸ் உள்ளிட்டவற்றுக்காக வைத்திருந்த தொகை என்று கதிர் ஆனந்த் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகைக்கான கணக்குகளை காண்பித்த பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.