கேரளாவில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு நகரில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் அரசியல் பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை முதலில் பெகால் காவல் நிலையம் விசாரித்தது. பின்னர் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை முடிந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே.வி.குன்ஹிராமன் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இரண்டு துடிப்பான இளைஞர்கள் அகால மரணம் அடைய நேரிட்டுள்ளது” என கூறியுள்ளனர். இந்த தீர்ப்புக்கு கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.