துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு – பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!

கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து முடிந்திருக்கிறது.

3-ம் தேதி காலை ஏழு மணிக்கு காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். அப்போது இல்லத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் காத்திருந்து, பின் அமைச்சர் தரப்பில் மதியம் ஒரு மணிக்கு மேல் வீட்டைத் திறந்து விட்டிருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை சோதனை

பின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்குப் பூட்டியிருந்த அறைகளைத் திறக்கமுடியாது என சொன்னாலும், அறைகளை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்திருக்கிறார்கள். மதியம் தொடங்கிய சோதனை இரவு வரை நீண்டிருந்தது. அமைச்சர் இல்லத்தில் சோதனை நடக்கும் தகவலறிந்து அவரின் ஆதரவாளர்கள் பலரும் அங்கே குவிய ஆரம்பித்துவிட்டார்கள். துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. அதேபோல, பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் மற்றும் அவரது நிறுவனத்தில் அதிகாலை வரை சோதனை நீடித்திருக்கிறது. அவரது இடங்களிலிருந்தும் சில முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். துரைமுருகன் இல்லத்தில் சோதனை முடிவடைந்த நிலையில், கதிர் ஆனந்த்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அடுத்த நாளும் சோதனை தொடர்ந்திருக்கிறது.

எதற்காக ரெய்டு?

இப்போது எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற சமயத்தில் வேலூர் தொகுதி வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வேலூர் தொகுதியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில் துரைமுருகனின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது இல்லத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்குத் தொடர்புடைய இடத்தில் நடைபெற்ற சோதனையில் 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

துரைமுருகன், கதிர் ஆனது வீடு – அமலாக்கத்துறை ரெய்டு

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வருமானவரித்துறை வழக்கு தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. இது குறித்து இப்போது சோதனை நடந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது கதிர் ஆனந்த்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் சில முக்கியமான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். அதேபோல, பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடங்களிலும் சில ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் எதுவும் செய்யப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நீள்கிறது. விரைவிலேயே இந்த வழக்கு விசாரணை இன்னும் சூடு பிடிக்கும்” என்றார்கள் விரிவாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.