“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல ரோடு போட்டுத் தருவேன்" – பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி உட்பட பிரதான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியவையும் தனித்தனியே களமிறங்குகின்றன. கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து, கையோடு வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி பா.ஜ.க வேட்பாளர் ஒருவர், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது காங்கிரஸிடமிருந்து கடும் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.

ரமேஷ் பிதுரி

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் எம்.பி-யும், கல்காஜி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான ரமேஷ் பிதுரி, “பீகாரின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல மாற்றுவேன் என லாலு யாதவ் ஒருமுறைக் கூறியிருந்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். இருப்பினும், ஓக்லா மற்றும் சங்கம் விஹாரில் உள்ள சாலைகளை நாங்கள் மாற்றியமைத்தது போல, கல்காஜியின் ஒவ்வொரு சாலையும் பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல் மென்மையாக அமைத்துத் தருவோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்று கூறினார்.

இதனைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது அவரின் கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் சக எம்.பி-யை துஷ்பிரயோகம் செய்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, இதற்கு பிரியங்கா காந்தியிடம் ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கவேண்டும் வலியுறுத்தினார்.

சுப்ரியா ஷ்ரினேட் – காங்கிரஸ்

அதேபோல், இந்தியா கூட்டணியில் சக கட்சியான ஆம் ஆத்மியின் எம்.பி சஞ்சய் சிங், “இது மிகவும் வெட்கக்கேடானது. நாடாளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியவருக்கும், மக்களுக்கு வெளிப்படையாகப் பணம் விநியோகம் செய்தவருக்கும் பா.ஜ.க சீட் வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில் தங்களுக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைக்கும் என்பதை டெல்லி பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இதே ரமேஷ் பிதுரிதான், கடந்த நாடாளுமன்றத்தில் அப்போதைய பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலிக்கு எதிராக வகுப்புவாத கருத்துக்களைப் பேசி எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களுக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.