India National Cricket Team: கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வென்று, 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 2018, 2020 இரண்டு சுற்றுப்பயணங்களில் இந்தியாவிடம் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு தற்போது பழிதீர்த்து இருக்கிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் வைட்வாஷ், தொடர்ந்து நான்கு முறை கைப்பற்றிய பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது என இந்திய அணி தற்போது பல்வேறு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த வேளையில், அடுத்த கட்டமாக இந்தியாவின் வைட்-பால் கிரிக்கெட்டின் பக்கம் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களின் கவனத்தை திருப்பி உள்ளனர்.
பும்ராவுக்கு 45 நாள்கள் ஓய்வு
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடர் தொடங்க இருக்கிறது. இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற இருக்கும் நிலையில், மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகளை விட ஒருநாள் தொடரின் மீதே பலரும் கவனத்தை குவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வுசெய்யப்படும் வீரர்களே ஏறத்தாழ இங்கிலாந்து தொடரில் விளையாடுவார்கள் என்பதால் அணி தேர்வும் மிகுந்த கவனம் பெறுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பும்ராவுக்கு முதுகுப் பிடிப்பு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு இன்னும் 45 நாட்களே இருக்கும் காரணத்தால் அவர் முழுமையாக ஓய்வு பெற்று காயத்தில் இருந்து மீண்டு வர நேரம் வழங்கப்படும். எனவே அவர் இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பே இல்லை எனலாம்.
தேவை ஷமி
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சை பலப்படுத்துவதற்கு ஒரு முக்கிய வீர தேவை. சிராஜ் தொடர்ந்து பல போட்டிகளில் பந்துவீசி வருவதால் அவருக்கும் நிச்சயம் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அர்ஷ்தீப் சிங் உடன் ஒரு அனுபவ வேகப்பந்துவீச்சாளரை அணிக்குள் எடுக்க இந்திய அணி விரும்பும்.
அந்த இடத்தை நிரப்பக்கூடிய ஒரே நபர் முகமது சாமி மட்டும்தான். காயம் காரணமாக அவர் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்காமல் போனது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கண்டிப்பாக தகுதி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மிரட்டிய ஷமி
முகமது ஷமி தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் ஒரு போட்டியை விளையாட அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை என்ற டி20 தொடரிலும், தற்போது 50 ஓவர் வடிவில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் வங்காள அணிக்காக விளையாடுகிறார். இன்று மத்திய பிரதேசத்துடன் நடைபெற்ற லீக் போட்டியில் வங்காள அணி தோல்வி அடைந்தாலும், முகமது ஷமி பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சிறப்பாக செயல்பட்டு உள்ளார் என்பது இந்திய ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
முகமது ஷமி பேட்டிங்கில் 34 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 42 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் எட்டு ஓவர்களை வீசி 40 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி இங்கிலாந்து உடனான வைட்பால் தொடர்களில் முகமது ஷமிக்கு வாய்ப்பளித்து சிராஜிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா மீண்டு வந்தால் அவருடன் ஷமி, சிராஜ், அர்ஷ்தீப் சிங் என வேகப்பந்துவீச்சு படை பலமாகும். நம்மிடம் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் இருப்பதால் வேகப்பந்துவீச்சில் எவ்வித பிரச்னையும் வராது.
மேலும் படிக்க | ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக டெஸ்ட் விளையாடிய 3 இந்திய பிளேயர்கள்..!