விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல்நாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. மூன்றாது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகிகள், மாநிலக்குழு, மாநில செயற்குழு, புதிய மாநிலச் செயலாளர்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி பெ. சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மத்திய குழு உறுப்பினராக உள்ளார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும் சண்முகம் இருந்துள்ளார். கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாய சங்கத்தின் மாநில செயலாளராக இருந்துள்ளார். வாச்சாத்தி வழக்கை இறுதி வரை நடத்தியவர்.
புதிய மாநில செயலாளராக தேர்வானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், “மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் செயலிலும் ஈடுபடுகிறது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.