`விஜய்க்கு கிறிஸ்தவ ஓட்டுகள் போய்விடக் கூடாது என்பதால்…' – உதயநிதியைச் சாடும் ஹெச் ராஜா!

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

அர்ஜூன் சம்பத்துடன் ஹெச்.ராஜா

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “திராவிட இயக்கத்தினர் அந்நிய கைக்கூலிகள், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி சாதிய மோதலை உருவாக்கினார்கள். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினே நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார். கிறிஸ்தவ சமுதாயத்தின் ஓட்டுகள் விஜய்க்கு போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் உதயநிதி நானும் கிறிஸ்தவன் என்று கூறுகிறார். இந்த  உண்மையை பேசுவதற்காக வழக்கு போட்டால் போட்டுக் கொள்ளுங்கள்.

தேசிய சிந்தனையுடன் இருப்பவர்களை தேச விரோதிகளுக்கு பிடிக்காது, இன்று நான் பேசுவது என்னுடைய வார்த்தைகள் அல்ல. நேரு, ஈவெரா பேசியதைத்தான் பேசுகிறேன். பிராமணர்களை கொல்ல வேண்டும் என இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சிதான் இன்று நடைபெறுகிறது.

ஹெச்.ராஜா

போதைப் பழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திராவிட இயக்கத்தினர் தேசத்துரோகிகள். மட்டுமல்ல, தமிழ் விரோதிகள், நாம் ஈவெராவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருடைய ஸ்டேட்மெண்டுகளை பார்க்க வேண்டும். கன்னடக்காரரான நீங்கள் எப்படி தமிழர்களுக்கு தலைவராகலாம் என்றதற்கு, தமிழர்களுக்கு அறிவு கிடையாது, தலைமைப்பண்பு கிடையாது, இவர்களுக்கு ஒரு கன்னடக்காரன்தான் தலைவராக முடியும் என்கிறார்.

நான் இந்தியை எதிர்த்ததற்கு காரணம், சனியன் தமிழ் மொழிக்காக அல்ல, அனைவரும் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற்காக என்றார். ஈவெராவைப்போல தேசத்துரோகி, தமிழ் இனத்துரோகி யாரும் கிடையாது. இப்படிப்பட்ட தமிழ் விரோதிகள் பிராமணர்களைப் பற்றி பேசுகிறார்கள்.

 எதற்காக பிராமணர்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? இன்னொரு உ.வே சாமிநாத ஐயர் பிறக்க கூடாது, சங்க இலக்கியங்களை மீண்டும் பதிப்பிக்கக் கூடாது என்பதற்காக. தமிழ்ச் சங்க இலக்கியங்களை ஈவெராவா வந்து பதிப்பித்தார்?

ஹெச்.ராஜா

ராமசாமி நாயக்கர் என்று நான் கூறுவதை சிலர் எதிர்த்தார்கள். ஆனால், ஈவெரா தான் எழுதிய கடிதங்களில் தன் பெயருக்கு பின்னால் ராமசாமி நாயக்கர் என்றுதான் கையெழுத்துப் போடுவார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய மானக்கேடு என்னதுன்னா, அப்பா அம்மா வைத்த பெயரை சொல்லக் கூடாது என்பார்கள். எங்க அக்கா ஜெயலலிதா ஒருமுறை கருணாநிதி என்று சொல்லிவிட்டார், அதற்கு கருணாநிதி ஒரு பேட்டியில் ‘என்னை கருணாநிதி என்று சொல்லிவிட்டார்’ என்று கோபப்பட்டார். வேறு எப்படி அவரைச் சொல்வது?

இந்த திராவிடியன் ஸ்டாக் எவ்வளவு மோசமானவர்கள் தெரியுமா, அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயம் இவர்களால் மழுங்கிப்போயுள்ளது.

விரைவில் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து போதைக்கு எதிராக, பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக கூட்டம் நடத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.