Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத சர்ச்சை!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரி, மாணவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 13-ம் தேதி நடந்த தேர்வில் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஏற்கெனவே கசிந்துவிட்டதாக கூறி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து அத்தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் எம்.பி. பப்பு யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரசாந்த் கிஷோர் கடந்த வியாழக்கிழமையில் இருந்து மாணவர்களுடன் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

அரசு பணிகளுக்காக கடந்த 13ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து சற்று தள்ளி பிரசாந்த் கிஷோரின் சொகுசு வேன் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ரூ.25 லட்சம் மதிப்புள்ள அந்த சொகுசு வேனில் படுக்கை வசதி, சமையல் அறை வசதி, குளிர்சாதன வசதி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சொகுசு வேன் கொண்டு வந்து நிறுத்தவேண்டிய அவசியம் என்ன என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ”போராட்டத்திற்கு இத்தகைய ஆடம்பர வசதியை பயன்படுத்துவது போராட்டத்தின் மதிப்பை குறைத்துவிடும்” என்று தெரிவித்துள்ளது.

ஆடம்பர வேன் வாடகைக்கு எடுப்பதற்கான நிதி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க, போராட்டத்தில் ஆடம்பரத்தை பயன்படுத்துவது போராட்டத்தின் நம்பகத்தன்மையை நீர்த்துப்போகச்செய்துவிடும் என்று தெரிவித்துள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று நாள்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன். வேனில் உறங்கவில்லை. இதனை பிரச்னையாக்குபவர்கள் போராட்டம் நடக்கும் இடத்தில் ஒரு நாள் இரவை குளிரில் கழிக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அல்லது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் குறித்து உங்களால் கேள்வி கேட்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே மறு தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் 5,943 பேர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.