பிளே பாய்ஸ் … ஆண்கள் பற்றி அடிக்கடி காதுல விழுற இந்த கேரக்டருக்கு என்ன அர்த்தம்..? இந்த கேரக்டர் கொண்ட ஆண்கள் பெண்கள் விஷயத்துல எப்படி நடந்துப்பாங்க..? இவங்க நல்லவங்களா, கெட்டவங்களா..? விளக்கமா சொல்லப்போறாங்க டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் ஷாலினி.
”பிளே பாய்ஸ் ’நல்லவங்களா, கெட்டவங்களா’ என்று அலசி ஆராய்வதற்கு முன்னால், எந்த மாதிரியான ஆண்களை பிளே பாய்ஸ் என்று சொல்கிறோம் என்று தெரிந்துகொள்வோம். ஓர் ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காதலில் இருப்பார். அவர்களுடன் செக்ஸுவல் உறவில்கூட இருப்பார். ஆனால், அவர்களில் ஒருவரையும் திருமணம் செய்துகொள்வது தொடர்பான எந்த வாக்குறுதியும் கொடுக்க மாட்டார். இவர்தான் பிளே பாய்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க வரையறை உருவாகாத உலகின் ஆரம்ப காலமது. தன்னுடன் கொண்ட உறவின் காரணமாக ஒரு பெண் கர்ப்பமானதும், இவளுடன் இனி உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற பெண்களுடன் பழக ஆரம்பித்தார்கள் ஆண்கள். இதனால் எல்லா ஆண்களும் எல்லாப் பெண்களிடமும் உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவொரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பல பெண்களும் உறவுக்காக ஒரு சில ஆண்களை மட்டும் திரும்பத் திரும்பத் தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள்.
இதுகுறித்து, basson எனும் ஆராய்ச்சியாளர் சொல்லும்போது, ‘’பெண்ணுக்கு உறவின்போது பயாலஜிக்கல் திருப்தி மட்டுமல்ல, எமோஷனல் திருப்தியும் தேவை. ‘இவர் என்னை மரியாதையா நடத்துறார்’, ‘என்னைப் பாராட்டுறார்’, ‘எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கார்’ என்பது போன்ற விஷயங்களில் பெண்ணை எமோஷலாக திருப்திப்படுத்துகிற ஆணை நோக்கியே பல பெண்களும் நகர்வார்கள். ஆணுக்கு உறவில் ஆர்கசம் எனும் உச்சநிலை மட்டும் போதும். பெண்ணுக்கோ, தான் உறவுகொள்கிற ஆணின் நல்ல விஷயங்கள் பற்றிய நினைவுடன் உறவை அனுபவித்தால்தான், அதில் திருப்தியை எட்ட முடியும். இந்த எமோஷனல் திருப்தியைக் கொடுத்த ஆண்களை நோக்கியே பல பெண்களும் நகர, மற்ற ஆண்கள் தங்களுக்கான பெண்கள் கிடைப்பதில் திண்டாட ஆரம்பித்தார்கள். பல பெண்களையும் தன்னை நோக்கி ஈர்த்த ஆண்களை, ’பொம்பளை விஷயத்துல பயங்கரமான ஆளுடா அவன்’ என்று தங்கள் பயத்தின் குறியீடாக முத்திரை குத்த ஆரம்பித்தார்கள் மற்ற ஆண்கள். அப்படி முத்திரை குத்தப்பட்ட ஆண்கள்தான் பிளே பாய்ஸ். இதுதான் பிளே பாய்ஸ் உருவான கதை.
ஆரம்பத்தில் சராசரி ஆண்களுக்கு பிரச்னைக்குரியவர்களாக இருந்து வந்த இந்த பிளே பாய்ஸ், ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கம் வந்தபிறகு பெண்களுக்கும் பிரச்னைக்குரியவர்களாக மாறினார்கள். இவர்களை நேசிக்கிற பெண்களுக்கே இவர்கள் பிளேபாய்ஸ் என்பது தெரியாமலே உறவில் விழ ஆரம்பித்தார்கள். தெரிந்தபிறகும் பல பெண்கள் இத்தகைய ஆணுக்காக உருகி, இவருக்குப் பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு, பிடித்த சமையலைச் செய்துபோட்டு இவரைப் பராமரித்தால், இவர் மனம் மாறி நம்மை மட்டும் காதலிப்பார், திருமணமும் செய்துகொள்வார் என்று நம்ப ஆரம்பித்தார்கள்.
ஒருவன் பிளேபாய் என்று தெரிந்தபிறகும் அவனுடனான காதலில் பல பெண்கள் விழுவதைக் கவனித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் இருக்கிற பெண்ணின் உளவியல் என்ன தெரியுமா? பல பெண்களால் நேசிக்கப்படுகிற் ஓர் ஆணை நான் என் காதலால் வெற்றிகொள்ள வேண்டும் என்ற பெண்ணின் ஆழ்மன ஈகோ தான் காரணம். அதனால்தான் இவன் ஒரு பெண்ணை ஏமாற்றியிருக்கிறான் என்பது தெரிந்தாலும் திரும்பத் திரும்ப ஓர் ஆணிடமே பல பெண்கள் விட்டில் பூச்சியாக விழுகிறார்கள்.
பிளேபாய்களைப் பொறுத்தவரைக்கும் ‘ஒரு பொண்ணு தன் மேல ஆசையா இருக்கா’ என்கிற நினைப்பே அவர்களுடைய உடம்பில் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த சந்தோஷத்தைத் தொடர்ந்து அனுபவிக்கும் போதைக்காகவே பிளே பாய் ஆண்கள், ஒரே நேரத்தில் பல பெண்களின் உணர்வுகளுடன் விளையாடுவார்கள். ஆதி காலத்தில் வேண்டுமானால் இனவிருத்திக்காக பிளே பாய்ஸ் அவசியப்பட்டிருப்பார்கள். ஆனால், தற்காலத்தில் பெண்களின் மனங்களுடன் விளையாடுகிற இவர்களுடனான உறவு தேவையா என்பதைப் பெண்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்கள் நிபுணர்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…