ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கருத்துகளைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அப்போதைய பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, “கல்காஜி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல மென்மையான சாலைகள் அமைத்துத் தருவேன்” என நேற்று முன்தினம் சர்சையைக் கிளப்பினார்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், டெல்லி முதல்வர் அதிஷியை விமர்சித்து புதிய சர்ச்சையை ரமேஷ் பிதுரி கிளப்பியிருக்கிறார். நேற்று, டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கல்காஜி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி, “மர்லினா (அதிஷியின் குடும்பப் பெயர்) தனது தந்தையை மாற்றினார். முன்பு அவர் மர்லினா, இப்போது அவர் சிங் ஆகியிருக்கிறார். இது அவர்களின் குணாதிசயம்.” என்று பேசினார்.
ரமேஷ் பிதுரியின் இத்தகையப் பேச்சைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் அதிஷி, “ரமேஷ் பிதுரியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என் தந்தை தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார். ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார். இப்போது, அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. பிறரின் உதவி இல்லாமல் நடக்க முடியாத அளவுக்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இப்போது, தேர்தலுக்காக இப்படி ஒரு கேவலமான செயலை நீங்கள் (ரமேஷ் பிதுரி) செய்வீர்களா? ஒரு முதியவரை துஷ்பிரயோகம் செய்யும் நிலைக்கு அவர் இறங்கிவிட்டார். இந்த நாட்டின் அரசியல் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.” என்று கூறி கண்ணீர் விட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “பா.ஜ.க அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. ஒரு பெண் முதல்வரை அவமதிப்பதை டெல்லி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். டெல்லி பெண்கள் அனைவரும் இதற்குப் பழிவாங்குவார்கள்.” என்றார்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…