புதுடெல்லி: டெல்லியிலுள்ள இந்தியா கேட் பெயரை பாரத் மாதா துவார் என மாற்றும்படி கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திரமோடிக்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவரான ஜமால் சித்திக்கீ கடிதம் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 வரும் குடியரசு தினத்தன்று, கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் முப்படைகளின் தளபதிகள் அணிவகுப்பு நடத்துகிறார்கள். இந்த ஊர்வலத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இவ்வேளையில், அந்த ஊர்வலம் நடைபெறும் இந்தியா கேட்டின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மை பிரிவின் தலைவர் சித்திக்கீ எழுதியக் கடிதத்தில், ‘தங்கள் தலைமையில் நம் நாட்டின் தேசப்பற்றும், இந்தியக் கலாச்சாரம் மீதான ஈடுபாடும் அதிகரித்துள்ளது. முகலாய ஆக்கிரமிப்பாளர்களாலும், கொள்ளையடித்த ஆங்கிலேயர்களாலும் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் ஆறி, அடிமைத்தனத்தின் கறையை உங்கள் ஆட்சிக் காலத்தில் துடைத்த விதம், இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கொடூரமான முகலாய ஔரங்கசீப்பின் பெயரிடப்பட்ட சாலையின் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் சாலை என்று மாற்றினீர்கள். இந்தியா கேட்டில் இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையை அகற்றினீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை நிறுவி, ராஜ்பாத்தை கர்தவ்ய பாதை என்று பெயர் மாற்றி இந்தியாவின். கலாச்சாரத்துடன் இணைத்துள்ளீர்கள். இதேபோல், இந்தியா கேட் பெயரை ‘பாரத் மாதா துவார்’ என்று மாற்ற வேண்டும்.
இந்தியா கேட்டை பெயர் மாற்றுவது, அதன் தூணில் பொறிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தியாகிகளின் பெயர்களுக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும். இந்த எனது முன்மொழிவை பரிசீலித்து, இந்தியா கேட்டின் பெயரை ‘பாரத் மாதா துவார்’ என்று மாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.