பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தனிச்சந்திராவை சேர்ந்தவர் அசார் கான். இவரது மனைவி கடந்த வியாழக்கிழமை இரவு ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் உரமாவில் இருந்து தனிச்சந்திரா செல்ல ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்து பயணித்தார். ஆனால் ஆட்டோ டிரைவர் தனிச்சந்திரா செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
உடனே சுதாரித்து கொண்ட அந்த பெண், ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார். ஆனால் டிரைவர் கேட்கவில்லை. மாறாக ஆபாச சைகை காண்பித்தப்படி ஆட்டோவை ஒட்டினார். அப்போது தான், டிரைவர் தன்னை கடத்தி செல்வதை அறிந்த பெண், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
இதுகுறித்து அந்த பெண் அம்ருதஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரை சேர்ந்த சுனில் (வயது 24) என்பதும், குடிபோதையில் பெண்ணை கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.