உக்ரைன் மீது கடந்த வாரத்தில் 600 ஆளில்லா விமான தாக்குதல்கள்: ஜெலன்ஸ்கி

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தப்பட்டன என அதன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கடந்த வாரத்தில், 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இவற்றுடன், வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து எங்களுடைய வான்வெளியை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். நேற்றிரவு நடந்த தாக்குதலில் ஈடுபட்ட 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன என அவர் கூறியுள்ளார்.

ரஷியா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை பெற்று, உக்ரைனில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கான ஆயுதங்களில் பயன்படுத்துகிறது. ரஷியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.