சென்னை: உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதுதான் அரசியல் அறமா என திமுகவுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும், தமிழர் தம் பெருமையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்தும் பெருமையோடு பேச வேண்டிய கருத்தரங்கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசுவது வருத்தம் தருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்போதெல்லாம் வரலாற்றைத் திருத்திப் பேசுவதும், தங்கள் கட்சிக்கு இல்லாத பெருமையை, தங்கள் ஆட்சி செய்யாத செயல்களை எல்லாம் செய்ததுபோல பொய் பேசி மாணவர்களையும், இளைஞர்களையும், சமுதாயத்தையும் ஏமாற்றி வருவதும் தொடர்வது தமிழகத்துக்கு ஆபத்தானது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பிரகடனம் செய்துவிட்டீர்களா என்று துணிச்சலுடன் கேள்வி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், “பின்விளைவுகள் ஏற்படும்” என்ற முரசொலியின் மிரட்டலுக்கு பயப்படாமல் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா என முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்.
“யார் அந்த சார்?” என்று கேள்வி கேட்டு தமிழகமே போராட்டக் களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் கூட, மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கருத்து தெரிவிக்காமலும் போராடாமலும் தமிழக நடிகர், நடிகைகள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.