கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் என அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், 18 பேர் கைதுசெய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மறுபக்கம், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்துக்குச் செல்லவே, கடந்த நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ விசாரிக்குமாறு உத்தரவிட்டது. அதேபோல், தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யுமாறு, சிறையிலடைக்கப்பட்ட 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் காலதாமதாக போடப்பட்டிருப்பதாகவும், முறையான ஆவணங்கள் எதுவும் வழங்கவில்லையெனவும் குறிப்பிட்டு, 18 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யுமாறு வாதிட்டனர்.

அதைத்தொடர்ந்து, “கைதுசெய்யப்பட்ட 18 பேர் ஆறு மாதங்களுக்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு மேலும் அவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் வைப்பதால் என்ன பயன்? இதில் பதியப்பட்டிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. முக்கிய குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல வருடங்களாக நடைபெற்றுவரும் நிலையில் மதுவிலக்குத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? தவறிழைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு, “இந்தக் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்பட்டவை அல்ல, மாதவரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை.” என்று தெரிவித்த அரசு தரப்பு, “இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டிருப்பதால் ஆவணங்கள் அனைத்தும் நாளைக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்படும்.” என்று தெரிவித்தது.

இருப்பினும், அரசு தரப்பு வாதத்தை ஏற்காத நீதிபதிகள், “60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவிட்டனர். முழு கிராமமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க, இவர்கள்தான் காரணம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று கூறி, 18 மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/JailMathilThigil
